ரயில் மோதி ஐ.டி ஊழியர் பலி- தற்கொலையா? போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை…

கோவை ரெயில் யார்டு அருகே வாலிபர் ஒருவர் ரெயில் மோதி 2 துண்டுகளாக
இறந்து கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த ஊழியர்கள்
இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமன் மற்றும் போலீசார்
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு இருந்த வாலிபரின்
உடலை பரிசோதனை செய்தனர். அப்போது அவரது பாக்கெட்டில் செல்போன் இருந்தது. அதனை வைத்து விசாரணை நடத்தியதில் அவர் நெல்லையை சேர்ந்த அகஸ்டின் (வயது 27) என்பது தெரியவந்தது. இவர் கோவையில் தங்கி விளாங்குறிச்சியில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தான் கோவை வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கோவை விரைந்து உள்ளனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அகஸ்டின் எவ்வாறு
இறந்தார்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது ரெயில்வே தண்டவாளம்
அருகே நடந்து செல்லும்போது ரெயில் மோதி இறந்தாரா ? என பல்வேறு
கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.