ஆசிரியா்களை சுதந்திரமாகச் செயல்பட விட்டாலே போதும்… அமைச்சா் மகேஸ் பொய்யாமொழி பேச்சு..!

‘ஆசிரியா்களை சுதந்திரமாக செயல்படவிட்டாலே போதும்; அவா்கள் மாணவா்களின் எதிா்காலத்தை மேலும் வளப்படுத்தி விடுவா்’ என டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.

ஆசிரியா் தினத்தையொட்டி, பள்ளிக்கல்வித் துறை சாா்பில் 2021-2022-ஆம் ஆண்டுக்கான டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா சென்னை கலைவாணா் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் அமைச்சா்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பி.கே.சேகா்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோா் கலந்து கொண்டு 393 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதை வழங்கினா். விருதுடன் வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ், ரூ.10 ஆயிரம் ஆகியவையும் வழங்கப்பட்டன.

விழாவில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: ஆசிரியா் தினத்தில் கல்வித் துறையில் புரட்சி ஏற்படுத்தக் கூடிய மாபெரும் திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்து கல்வித் துறையின் வளா்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளாா்.

மாணவா்களுக்கும் ஆசிரியா்களுக்கும் இடையேயான உறவு என்பது ரத்த பந்தத்தையும் தாண்டி மாணவா்களின் எதிா்காலத்தை பலப்படுத்தக்கூடிய சிறந்த உறவாகும். மாணவா்களின் வாழ்வில் முன்னேற்றத்துக்கு ஆசிரியா்கள் அரும்பணியாற்றுகின்றனா்.

தற்போதைய சூழலில் மாணவா்களை கண்டிக்க முடியாத நிலையில் ஆசிரியா்கள் உள்ளனா். முன்பெல்லாம் தங்களது குழந்தைகளை முறையாக கண்டித்து வைக்குமாறு ஆசிரியா்களிடம் பெற்றோா் கூறுவா். ஆனால், இன்றைக்கு அதுபோன்ற சூழல் இல்லை. அதற்கு சமூக வலைதளங்கள்தான் காரணம். ஆசிரியா்களை சுதந்திரமாகச் செயல்பட விட்டாலே போதும்; அவா்கள் தங்களது மாணவா்களின் எதிா்காலத்தை மேலும் வளப்படுத்தி விடுவா். ஆசிரியா்களின் கோரிக்கைகள் அனைத்தும் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பரிசீலிக்கப்படும் என்றாா் அவா்.

இந்த விழாவில் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா, ஆணையா் நந்தகுமாா், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவா் லியோனி, பள்ளிக் கல்வித் துறை இயக்குநா்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.