சார்ஜாவிலிருந்து கோவைக்கு வந்த விமானத்தில் ரூ 1.80 கோடி கடத்தல் நகைகள் பறிமுதல்- கேரள வாலிபர் கைது..!

கோவை: கோவை விமான நிலையத்திலிருந்து உள்நாடு மற்றும் இலங்கை, சிங்கப்பூர் ,சார்ஜா, ஆகிய வெளி நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி சார்ஜாவிலிருந்து கோவைக்கு வரும் விமானத்தில் தங்க நகைகள் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து நேற்று காலை 4 மணிக்கு சார்ஜாவிலிருந்து கோவைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலையத்தில் வைத்து சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.அதில் ஒரு நபரின் நடவடிக்கை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனே அந்த நபரை அதிகாரிகள் அங்குள்ள ஒரு தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவர் அணிந்திருந்த பெல்ட், கைச்செயின், கழுத்தில் போட்டிருந்த செயின் ஆகியவற்றில் ஏராளமான தங்க நகையை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து 1.5 கிலோ தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ 1 கோடிய 80 லட்சம் இருக்கும். அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த பெரோஸ் ரகுமான் ( வயது 30) என்பது தெரியவந்தது .மேலும் நடத்திய விசாரணையில் இந்த கடத்தலில் மொத்தம் 7 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.இதையடுத்து பெரோஸ் ரகுமானை கைது செய்தனர் .அவருடன் தொடர்புடைய நபர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.