அனைத்து ரேஷன் கடைகளுக்கும் ஐ.எஸ்.ஓ. தர சான்று- கூட்டுறவுத் துறை உத்தரவு..!

சென்னை:ரேஷன் கடைகளில் சிறந்த சேவை வழங்குவதற்கான நம்பகத் தன்மையை கார்டுதாரர்களிடம் ஏற்படுத்துவதற்காக, ஐ.எஸ்.ஓ., தரச் சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்குமாறு, அதிகாரிகளுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கூட்டுறவுத் துறை வாயிலாக, 33 ஆயிரம் ரேஷன் கடைகளில், இரண்டு கோடி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன.

சில ரேஷன் ஊழியர்கள் கடைகளை தாமதமாக திறப்பது, எடை குறைவாக பொருட்களை வழங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். ரேஷன் பொருட்களும் தரமற்று இருப்பதாக புகார்கள் எழுகின்றன.கொரோனா ஊரடங்கு போன்ற நெருக்கடியான காலங்களிலும், ஊழியர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் ரேஷன் கடைகளை திறந்து, கார்டுதாரர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினர். சிலர் செய்யும் தவறுகளால், ஒட்டுமொத்தமாக ரேஷன் கடைகள் மற்றும் ஊழியர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, ரேஷன் கடைகளின் தரத்தை மேம்படுத்த துாய்மைப் பணி, சேதமடைந்த கட்டடங்கள் சீரமைப்பு, கார்டுதாரர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள ஊழியர்களுக்கு பயிற்சி என, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதைத் தொடர்ந்து, தற்போது அனைத்து கடைகளுக்கும் ஐ.எஸ்.ஓ., தரச் சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு, கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஐ.எஸ்.ஓ., என்ற சர்வதேச தர அமைப்பு, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை தரமாக வழங்கும் நிறுவனங்களுக்கு ஐ.எஸ்.ஓ., சான்று வழங்குகிறது.