மறுகுடியமர்வு செய்யப்படும் குடும்பங்களுக்கு பவானிசாகரில் வீட்டுமனை பட்டா வழங்க இடம் தேர்வு..!

நீதிமன்ற உத்தரவின் படி மறுகுடியமர்வு செய்யப்பட உள்ள தெங்குமரஹாடா கிராமத்தில் வனத்துறை கூடுதல் முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு ஐஏஎஸ் ஆய்வு. மறுகுடியமர்வு செய்யப்படும் குடும்பங்களுக்கு பவானிசாகரில் வீட்டுமனை பட்டா வழங்க இடம் தேர்வு..
சத்தியமங்கலம்: முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் மாயாற்றின் கரையில் அமைந்துள்ள தெங்குமரஹாடா வன கிராமத்தில் வசிக்கும் மக்களை வெளியேற்றி மறுகுடியமர்வு செய்ய வனத்துறை பரிந்துரைத்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி அக்டோபர் மாதம் 10ஆம் தேதிக்குள் மறுகுடியமர்வு செய்யப்பட்டு அதற்கான அறிக்கையை வனத்துறை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டதை தொடர்ந்து தற்போது வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மறுகுடியமர்வு  தொடர்பான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையே  தமிழக வனத்துறை கூடுதல் முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு ஐஏஎஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் தெங்குமரஹாடா கிராமத்திற்கு சென்று மறுகுடியமர்வுக்கு விருப்பம் தெரிவித்த மக்களிடம் கலந்துரையாடினர். கிராம மக்கள் தங்களுக்கு வீடு கட்ட இடம் ஒதுக்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்த நிலையில்  ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை அருகே கோழிப்பண்ணை பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 69 ஏக்கர் நிலத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி 497 குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்குவது குறித்து வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு மற்றும் ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் பவானிசாகரில் ஆய்வு மேற்கொண்டு இடத்தை தேர்வு செய்துள்ளனர். இது குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின் போது வனத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.