சர்வதேச யோகா தினம்… கலையை பட்டிதொட்டிகள் தோறும் பரப்ப வேண்டும்- கவர்னர் ரவி பேச்சு.!

உடல்நலத்தை பேணவும் மனதை ஒருமுகப்படுத்தவும் யோகா உதவுகிறது” என, தமிழக கவர்னர் ரவி பேசினார்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நேற்று நடந்த சர்வதேச யோகா தின விழாவில் அவர் பேசியது:’யோகா’ உலகிற்கு நம் நாடு தந்த பரிசு.
தமிழகத்தில், குறிப்பாக சிதம்பரம் யோகாவின் பிறப்பிடமாக உள்ளது. அதனை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு நமக்குள்ளது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருமூலர் இயற்றிய திருமந்திரத்தை பதஞ்சலி முனிவர் பயன்படுத்தினார். ஆசனங்களை பல தளங்களில் செயல்படுத்தி புதுமைகளை செய்திருக்கிறார்.

யோகா ஒரு சூத்திரம், உடலை மகிழ்ச்சியாக வைக்கவும், அமைதியான சூழலை உருவாக்கவும், மனதை ஒருமுகப்படுத்தவும் உதவுகிறது.நமது வாழ்க்கை முறை காரணமாக அதிகமானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளோம். சர்க்கரை நோய் பரவும் தன்மை கொண்டது கிடையாது. எனவே நமது வாழ்க்கை முறையை யோகா பயிற்சி கொண்டு மாற்றும் போது சர்க்கரை நோய் இல்லாமல் வாழ முடியும்.யோகா கலையை கிராமங்கள், நகரங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள், பட்டிதொட்டிகள் தோறும் பரப்ப வேண்டும். அப்போது நமது உடல் நலத்தை எளிய முறையில், செலவின்றி பாதுகாக்க முடியும்.நான் பள்ளிப் பருவத்திலிருந்து யோகா செய்வதால், நல்ல உடல்நலத்தை பெற முடிந்தது.இன்று அமெரிக்காவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நியூயார்க் நகரில் உள்ள தலைமை செயலகத்தில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் யோகா நிகழ்ச்சி நடந்தது. இது நமக்கு பெருமை.யோகா நமது நாட்டின் பெருமை. இதனை நாம் வாழ்வில் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளும் போது, வாழ்வில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், இன்ப, துன்பங்கள், சோதனைகளின்போது நமது உடல் மற்றும் மன நலத்தை பாதுகாத்து சிறப்பாக செயல்படுத்த முடியும்.இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.