பரம்பிக்குளம் அணையில் மதகு பொருத்தும் பணி 90 சதவீதம் நிறைவு..!

கோவை: பரம்பிக்குளம் -ஆழியாறு எனும் பி.ஏ.பி திட்டத்தில் மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, அப்பா் ஆழியாறு, திருமூா்த்தி என 9 அணைகள் உள்ளன.

இதில் பரம்பிக்குளம் அணை பி.ஏ.பி திட்டத்தில் உள்ள தொகுப்பு அணைகளில் அதிக கொள்ளளவு கொண்டது. 17 டி.எம்.சி.க்கும் அதிகமாக கொள்ளளவு கொண்ட இந்த அணை, ஒருமுறை நிரம்பிவிட்டால் ஒரு ஆண்டு பாசனத்துக்கும், குடிநீருக்கும் பற்றாக்குறை ஏற்படாது. பி.ஏ.பி திட்டத்தில் தமிழகத்தில் 4.25 லட்சம் ஏக்கா் நிலம், கேரளவில் 22 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.இந்நிலையில், பரம்பிக்குளம் அணையின் மதகு கடந்த செப்டம்பா் 20-ந் தேதி உடைந்ததால் அணையில் இருந்து 6 டி.எம்.சி தண்ணீா் வெளியேறியது.

மதகு உடைப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து நீா்ப் பாசனத் துறை அமைச்சா் துரைமுருகன் நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா். மேலும், சில அமைச்சா்களும் ஆய்வு செய்தனா்.
இதையடுத்து ரூ.7.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மதகு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி தற்போது 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. டிசம்பா் முதல் வாரத்துக்குள் பணிகள் முழுமையாக முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். இதனை கோவை மண்டலத் தலைமைப் பொறியாளா் முத்துசாமி, பி.ஏ.பி கண்காணிப்புப் பொறியாளா் தேவராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் பணியை ஆய்வு செய்து வருகின்றனா்.

பரம்பிக்குளம் அணை மதகு உடைப்பு ஏற்பட்டதால் குடிநீருக்கு பாதிப்பு ஏற்படும் என சிலா் தெரிவித்தனா். ஆனால், அதிகாரிகள் தங்கள் நீா் மேலாண்மை திறமையின் மூலம் தற்போது வரை பாசனத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் தண்ணீா் வழங்கி வருகின்றனா். இதனால் மதகு உடைப்பால் திருமூா்த்தி அணையில் இருந்து பாசனம் பெறும் பகுதிகள் பாதிப்படையவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.