கோவையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம் பல்வேறு வடிவங்களில் சிலைகள் தயார்..!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வருகிற 31-ந் தேதி கொண்டாடப்பட
உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும், ஊர்வலம் நடத்தவும் அரசு தடை விதித்தது.
சிலை வடிவமைப்பாளர்கள் இதனால் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டது. பெரிய அளவிலான சிலைகளை தயாரிக்கவில்லை. ஒரு அடி முதல் 3 அடி வரையிலான சிலைகள் தயாரிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளதால் சிலைகள் வைக்க அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி நெருங்கி வருவதால் கோவை தெலுங்குபாளையம்,
சுண்டக்காமுத்தூர் உள்ளிட்ட பகுதிளில் விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள்
தீவிரமாக நடந்து வருகிறது. புதிய வடிவிலான விநாயகர் சிலைகளை வடிவமைக்கும்
பணிகளில் சிலை வடிவமைப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிறிய அளவில் களிமண்ணால் செய்த சிலைகள் ரூ.250, காகித கூழில் செய்த சிலைகள் ரூ.50-க்கும் விற்கப்படடுகிறது. இதுகுறித்து விநாயகர் சிலை தயாரித்து வரும் தெலுங்குபாளையத்தை சேர்ந்த சக்திவேல் முருகன் கூறியதாவது:-
நீரில் எளிதில் கரையும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதமே பணிகளை தொடங்கி விட்டோம். கோவை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்து ஆர்டர்கள் வருகின்றன. நாங்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படதா வகையில், நீரில் எளிதில் கரையக்கூடிய விநாயகர் சிலைகளை பேப்பர் கூழ், வாட்டர் கலர், ஓடக்கல் மாவு, கிழங்கு மாவுகளில் விநாயகர் சிலைகள் தயாரித்து வருகிறோம்.
பூச்சி அரிக்காமல் இருக்க அதில் மயில் துத்த பொடியை கலந்து சிலைகள்
தயாரிக்கப்பட்டுள்ளன. நீரில் எளிதில் கரையும் வர்ணம் சிலைகளுக்கு
அடிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் சிலைகள் திருப்பூர், ஈரோடு,
அவினாசி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு விநாயகர் சிலைகளை வியாபாரிகள்
வாங்கி செல்கின்றனர். இதுதவிர அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அதிகளவில் அனுப்பி வருகிறோம். முன்பு 10 முதல் 15 அடிகள் வரை சிலை செய்து வந்தோம். தற்போது பொது இடங்களில் 7 அடிக்கு மேல் சிலைகள் வைக்கக்கூடாது என
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது 7 அடி சிலைகள் மட்டுமே
தயாரித்து வருகிறோம். விநாயகர் சிலைகள் ரூ.1000 முதல் ரூ.25 ஆயிரம் வரை
விற்பனையாகிறது. சிலை செய்வதற்கு தேவையான பொருட்களின் விலை
உயர்ந்துள்ளதால் விநாயகர் சிலைகளின் விலையும் உயர்ந்துள்ளது.
பல்வேறு வடிவங்களில்
இந்த ஆண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டும் விநாயகர், ராஜ கணபதி, டிராகன் உருவ
வாகனத்தில் இருக்கும் விநாயகர், புல்லாங்குழல் மற்றும் மயில் மீது
அமர்ந்திருக்கும் விநாயகர், மாடுகளுடன் ஏர்கலப்பையை பிடித்துக் கொண்டு
இருக்கும் விவசாயி சிலை, தாமரை, சிங்கம், மயில், நந்தி, எலி, மான்,
அன்னம் ஆகியவற்றின் மீது அமர்ந்திருக்கும் விநாயகர், கையில்
இசைக்கருவிகள் ஏந்தி நிற்கும் விநாயகர், சிவன் சிலையை ஏந்தி நிற்கும்
விநாயகர் என பல்வேறு வடிவங்களில் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
சித்தி விநாயகரை ஆஞ்சநேயர் தூக்கிச் செல்வது போன்ற விநாயகர் சிலையும்
வடிவமைக்கப்பட்டுள்ளது.கடந்த 2 வருடங்களாக விநாயகர் சிலைகள் விற்பனை
பெரியளவில் இல்லை. இந்த ஆண்டு வியாபாரம் இருக்கும் என
எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.