3-வது நாளாக யானையை தேடும் பணி தீவிரம்: உடல் நலம் பாதிக்கப்பட்ட ஆண் யானை காரமடை வனப்பகுதியில் நிற்பது உறுதி- மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு..!

கோவை பெரியநாயக்கன்பாளையம் சரகம், ஆனைகட்டி வடக்கு பீட், சீங்குளி
பழங்குடியின கிராமம் அருகே கொடுந்துறைப்பள்ளம் ஆற்றங்கரையில் இரு
மாநிலங்களுக்கு இடையான எல்லைப்பகுதியில் 8 வயது மதிக்கதக்க ஆண் யானை
ஒன்று கடந்த 15-ந் தேதி தென்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற வனத்துறையினர், யானையின் உடல் நலம் குறித்து கண்காணிக்க தொடங்கினர். யானை உடல் நலம் பாதிக்கப்பட்டு, உடல் மெலிந்து காணப்பட்டது. எனவே அந்தயானைக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். இதையடுத்து அந்த யானையை கண்காணிக்கும் பணியில் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக ஊழியர்கள் அதாவது தமிழகம் சார்பில் 11 குழுக்கள் மற்றும் கேரளாவை சேர்ந்த ஊழியர்கள் 4 குழுவாக தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் யானை கேரள மாநிலம் அட்டப்பாடி சரகத்தின் கீழ் உள்ள தாசனூர் மேடு பகுதிக்கு சென்றது. இதையடுத்து கேரள வன அலுவலர்களுடன் தகவல்களை பகிர்ந்து கோவை வன ஊழியர்கள் யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர். யானையை கண்டறிய டிரோன் குழுவும் அமைக்கப்பட்டு காமிராக்கள் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும் யானையை கண்டறிய முடியவில்லை.
நேற்று 2-வது நாளாக யானையை தேடும் பணியில் தமிழக, கேரள வனத்துறை
அதிகாரிகள் ஈடுபட்டனர். மேலும் யானையை பிடித்து சிகிச்சை அளிக்க
பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் இருந்து கும்கி யானை கலீம், முத்து
(அரிசி ராஜா) கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் வனத்துறைனர்ஆனைகட்டி
அடுத்த செங்குட்டை பகுதியில் யானையை பார்த்துள்ளனர். அப்போது அங்கு யானை
இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தயார் நிலையில் இருந்த வனகால்நடை டாக்டர் சுகுமார், ஆனைமலை புலிகள் காப்பகம் கால்நடை டாக்டர் விஜயராகவன், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கால்நடை டாக்டர் சதாசிவம் அடங்கிய மருத்துவ குழுவினர், மயக்க ஊசி உள்ளிட்ட மருந்துகளை எடுத்துக்கொண்டு யானை தென்பட்ட இடத்திற்கு  விரைந்தனர். ஆனால் அதிகாரிகள் மற்றும் டாக்டர்கள் குழுவினர் அந்த இடத்திற்கு செல்ல மாலை நேரமானது. இதனால் யானையை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் யானை செங்குட்டை பகுதியில் இருந்தும் நகர்ந்து மாயமானது.
3-வது நாளாக வனத்துறையினர் இன்று யானையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது யானை செங்குட்டை பகுதியில் இருந்து காரமடை அடுத்த நிலம்பதி
உக்கையூர் மலைபகுதிக்கு சென்று நிற்பது தெரியவந்தது. இதையடுத்து
தமிழகத்தின் 7 குழுக்களில் 2 குழுக்கள் அந்த பகுதிக்கு சென்றனர்.
உக்கையூர் மலைபகுதியை தாண்டி வேறு யானைகள் கூட்டம் இருப்பதால் இந்த 8
வயது மதிக்கதக்க ஆண் யானை அங்கு செல்ல வாய்ப்பில்லை என வனத்துறையினர்
உறுதி செய்தனர். டிரோன் குழுவும் காமிராக்களை பறக்கவிட்டு தேடி
வருகின்றனர். இன்று உறுதியாக யானையை பிடித்துவிடுவோம் என வனத்துறையினர்
தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை டாக்டர்கள் கூறும்போது,
யானையின் உடல் நலம் மிகவும் மோசமான நிலையில் இல்லை. யானை முதல் நாள்
முதல் ஆக்ரோசமாக உள்ளது. வன ஊழியர்களை துரத்தவும் செய்துள்ளது.
தேவைப்பட்டால் துப்பாக்கி மூலம் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை
அளிக்கப்படும். உடல் நிலை பாதிக்கப்பட்ட யானை ஒரு நாளைக்கு குறைந்தது 4
கிலோ மீட்டர் வரை தான் நடந்து செல்லும், ஆனால் இந்த யானை 15 முதல் 20
கிலோ மீட்டர் வரை நடந்து ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக
நகர்ந்து செல்கிறது. யானையை பார்த்தவுடன் முதலில் யானைக்கு பழங்களில் மாத்திரை, மருந்துகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று மருந்துகள்
அளிக்கப்படவுள்ளது என்றனர்.