கோவையில் ஒரே நாளில் கல்லூரி மாணவி உள்பட 3 இளம்பெண்கள் திடீர் மாயம்..!

கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர 19 வயது மாணவி. இவர் தனியார்
கல்லூரியில் பி.காம் 3-வது ஆண்டு படித்து வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு பேஸ்புக் மூலமாக வாலிபர்
ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. ஆரம்பத்தில் 2 பேரும் நட்பாக பழகினர்.
பின்னர் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது
காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் தந்தைக்கு தெரிய வரவே அவர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தார். இதனால் கடந்த சில நாட்களாக மாணவி மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் பெற்றோரிடம் தெரிவிக்காமல் தனது
மொபட்டில் வெளியே சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு
திரும்பி வரவில்லை. செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப்
செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து மாணவியின் தந்தை சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகிறார்கள்.

ஒண்டிப்புதூரை சேர்ந்த 28 வயது இளம்பெண். இவரது கணவர் இறந்து விட்டார்.
இதனையடுத்து அவர் அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அப்போது
இளம்பெண்ணுக்கு அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம்
ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. சம்பவத்தன்று வீட்டில் இருந்த
இளம்பெண் திடீரென மாயமாகி விட்டார். இது குறித்து அவரது பெற்றோர்
சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார்
வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

மருந்துக்கடை பாப்பம்பட்டியை சேர்ந்தவர் கஸ்தூரி (வயது 23). இவர் அந்த பகுதியில் உள்ள மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல
வேலைக்கு சென்றார். ஆனால் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இது
குறித்து கஸ்தூரியின் பெற்றோர் பீளமேடு போலீசில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் போலீசார் மாயமான கஸ்தூரியை தேடி வருகிறார்கள்.