10-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த கண்டெக்டர் போக்ஸோவில் கைது..!

கோவை அருகே உள்ள இடையர்பாளையத்தை சேர்ந்த 14 வயது மாணவி. இவர்
ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

மாணவி தினசரி பள்ளிக்கு தனியார் பஸ்சில் வருவது வழக்கம். அப்போது அந்த
பஸ்சில் கண்டெக்டராக வேலை பார்த்த தொண்டாமுத்தூர் அருகே உள்ள
தென்னமநல்லூரை சேர்ந்த சகாதேவன் (வயது 25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளது. ஆனால்
மாணவியிடம் சகாதேவன் திருமணமானதை மறைத்து பழகி வந்தனர். இந்த பழக்கம்
நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 6 மாதங்களாக ஒருவரை ஒருவர்
காதலித்து வந்தனர்.

சம்பவத்தன்று மாணவியின் பெற்றோர் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில்
கலந்து கொள்வதற்காக கும்பகோணத்துக்கு சென்றனர். மாணவி மட்டும் வீட்டில்
தனியாக இருந்தார். இதனை அறிந்த சகாதேவன் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி
அவரை தொண்டாமுத்தூரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு கடத்தி சென்றார்.
அங்கு வைத்து அவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

மாணவியின் வீட்டிற்கு சென்ற அவரது மாமா அவர் வீட்டில் இல்லாதது கண்டு
அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் மாணவியை செல்போன் மூலமாக தொடர்பு
கொண்டு எங்கே இருக்கீறாய் என கேட்டார். அப்போது தான் சகாதேவன் ஆசை
வார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்
தொண்டாமுத்தூருக்கு சென்று மாணவியை மீட்டார். பின்னர் இது குறித்து
தொண்டாமுத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில்
போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் திருமணமானதை மறைத்து 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று
பாலியல் தொல்லை கொடுத்த சகாதேவனை கைது செய்தனர். பின்னர் அவரை
கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.