கோவையில் அனைத்து பள்ளிகளிலும் பாலியல் தொல்லை தெரிவிக்க புகார் பெட்டி வைக்க அறிவுறுத்தல்.!

கோவை:
மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தைரியமாக சொல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். அதற்காக அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

மேலும் போலீசார் பள்ளிகளுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் பல்வேறு குற்றங்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் தங்களது பாலியல் புகார்களை தெரிவிக்க அனைத்து பள்ளிகளில் புகார் பெட்டி வைக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட அரசு துறை அதிகாரி ஒருவர் கூறியிருப்பதாவது:
பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் சார்ந்து புகார் அளிப்பதற்கு புகார் பெட்டி வைக்க வேண்டும். புகார் பெட்டி இரு சாவிகள் கொண்டதாகவும், அதில் ஒன்றினை மூத்த பெண் ஆசிரியரிடமும் மற்றொன்றை மாவட்ட சமூக நல அலுவலர் அல்லது மாவட்ட இலவச சட்ட ஆணையத் தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

பள்ளிகளில் மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் அருகில் உள்ள போலீஸ் நிலைய கண்காணிப்பாளரது தொலைபேசி எண் மற்றும் அலுவலக முகவரி ஆகியவை தகவல் பலகையில் ஒட்டப்பட வேண்டும். அந்த பலகையில் குழந்தைகள் உதவி மைய எண் 1098, பள்ளிக்கல்வித் துறையின் உதவி சேவை தொலை பேசி எண் 14417, பெண்கள் உதவி தொடர்பு எண் 181 போன்ற உதவி மைய எண்களும் இடம் பெறுதல் வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் உள்ளூர் புகார் குழு அமைக்கப்பட வேண்டும். பள்ளிகளில் உளவியல் ஆலோசகர் மூலம் விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். பெற்றோர். வகுப்பு ஆசிரியர் கூட்டம் சீரான கால இடைவெளியில் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.