வேலூர் மாவட்டத்தில் மோட்டார் வாகன ஆய்வாளரிடம் ரூ.6.25 லட்சத்தை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் பறிமுதல்…

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை, தமிழக-ஆந்திர எல்லையில் அமைந்துள்ளது. இங்குள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடியில், மோட்டார் வாகன ஆய்வாளராக வசந்தி என்பவர் 2022 மார்ச் 17-ம்தேதி முதல் பணியாற்றி வருகிறார். இவர் ஆந்திராவில் இருந்துவரும் வாகன உரிமையாளர்களிடம் லஞ்சம் பெறுவதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆய்வாளர் விஜய் தலைமையிலான போலீஸார் கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

பின்னர், பணி முடிந்து காரில்புறப்பட்ட வசந்தியை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் பின் தொடர்ந்தனர். சுமார் 25 கி.மீ. பயணித்தநிலையில், ராணிப்பேட்டை பாரதி நகர் அருகே வசந்தியின் காரை மடக்கினர். காரில் சோதனையிட்டதில் கணக்கில் வராத பணம்ரூ.3 லட்சம் இருந்தது. அந்த பணத்துக்கு அவரால் கணக்கு காட்ட முடியவில்லை. இதையடுத்து, ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள வசந்தியின் வீட்டில் சோதனை நடத்தினர். இதில், ரூ.3.25 லட்சம் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ” பறிமுதல் செய்யப்பட்ட ரூ.6.25 லட்சம் எந்த வகையில் வந்தது என்பதை மோட்டார் வாகன ஆய்வாளர் வசந்தி விசாரணையின்போது நிரூபிக்க வேண்டும்” என்றனர்.