டெல்லியில் பெரும் பதற்றம்: மீண்டும் விவசாயிகள்போராட்டம்- உச்சக்கட்ட பாதுகாப்பு..!!

டெல்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் இன்று மீண்டும் விவசாயிகள் போராட்டத்தை தொடங்க இருக்கும் நிலையில், ஜந்தர் மந்தர் பகுதியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் இதில் பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தில் விவசாயிகள் பலர் உயிரிழந்த நிலையில் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்த விவசாயிகள், மற்ற கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும், பயிர்களுக்கான குறைந்தப்பட்டச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இந்த கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் மத்திய அமைச்சரின் மகனால் கார் ஏற்றி கொல்லப்பட்ட லக்கிம்பூர் கேரி பகுதியில் கடந்த 18 ஆம் தேதி 75 மணி நேர தர்ணா போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். 40 விவசாய சங்கங்களை கொண்ட சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பு நடத்திய இந்த போராட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இன்று முதல் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடபோவதாக விவசாய சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டன. இதில் நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து ஏராளமான விவசாயிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து டெல்லிக்கு வருகை தந்தனர்.

இதற்கிடையே இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்களில் முக்கிய பங்கு வகித்த பாரதிய கிசான் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத்தை டெல்லி போலீசார் நேற்று கைது செய்தனர். அவரை காவல்துறை சொந்த ஊருக்கு திரும்பி செல்லுமாறு கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. மத்திய அரசின் பேச்சை கேட்டு டெல்லி போலீஸ் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக ராகேஷ் திகாயத் குற்றம்சாட்டியுள்ளார்.

ராகேஷ் திகாயத்தின் கைது நடவடிக்கை விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் போராட்டத்துக்கு வரும் விவசாயிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. பிற மாநிலங்களில் இருந்து போராட்டத்தில் பங்கேற்க விவசாயிகள் வருகை தருவதால் சிங்கு எல்லையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.