கூகுள்-பே மற்றும் போன்-பே உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்டிருந்தது. மக்களின் அன்றாட பயன்பாட்டில் ஒன்றாக மாறியுள்ள டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு கட்டணம் என்ற செய்தியானது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவைக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் ஏதும் அரசுக்கு இல்லை என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக நிதியமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில், “யுபிஐ டிஜிட்டல் சேவை என்பது பொது மக்களுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் சிறந்த பங்களிப்பை தந்து வருகிறது. எனவே யுபிஐ சேவைக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் அரசுக்கு இல்லை. இந்த சேவை வழங்குவோர் சந்திக்கும் செலவுகளை வேறு வழியில் அரசு மீட்டெடுக்கும். டிஜிட்டல் பேமென்ட் சேவைகளை ஊக்குவித்து பயனாளர்கள் சிறந்த சேவை பெற அரசு தொடர்ந்து ஆதரவு தரும்” என விளக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, யுபிஐ சேவை வசதி 2016ம் ஆண்டு ஏப்ரலில், அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனால் தொடங்கப்பட்டது. அதன்படி, யுபிஐ மூலம் கூகுள்-பே மற்றும் போன்-பே வாயிலாக கட்டணமின்றி பரிவர்த்தனை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டது.
ஆன்லைன் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை என்பது இந்தியாவில் தற்போது ஸ்மார்ட் போன் பயனாளர்கள் அனைவரும் இயல்பாக செய்யக்கூடிய நடவடிக்கையாக உள்ளது. எளிய டீக் கடை தொடங்கி தங்க நகை வாங்குவது வரை அனைத்து பண பரிவர்த்தனைகளையும் ஆன்லைன் டிஜிட்டல் பேமன்ட் வசதிகளான கூகுள் பே, போன் பே, பேடிஎம், பிம் யூபிஐ போன்ற பல்வேறு வழிகளில் மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
பணமதிப்பு இழப்பிற்கு பிறகு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை, பொதுமக்களின் தினசரி வாழ்வில் முக்கிய அங்கமாக மாறியுள்ளது. இந்தியாவில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் ரூ.600 கோடி மதிப்பில் பரிவர்த்தனை நடந்துள்ளதாக அரசின் புள்ளி விவரம் கூறுகிறது.
Leave a Reply