அரசு மருத்துவமனை மருந்துகள்: தனியார் மருத்துவமனையில் விற்பனை – பொதுமக்கள் அதிர்ச்சி

அரசு மருத்துவமனை மருந்துகள்: தனியார் மருத்துவமனையில் விற்பனை – பொதுமக்கள் அதிர்ச்சி

தமிழக அரசு மருத்துவமனைகளில் விற்பனைக்கு அல்ல என்று மருந்துகள் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைத்து இலவச சிகிச்சை அளித்து ஏழை எளிய மக்களின் உயிர்களை காத்து வருகின்றனர். இது நமது மாநிலத்தில் உள்ள ஏழை, எளிய நோயாளிகள் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள பண வசதி இல்லாததால் அவர்களுக்கு மருத்துவமனையில் இலவச மருந்துகள் வழங்கப்படுகிறது. இந்த மருந்துகள் மொத்தமாக தனியார் மருத்துவமனை மற்றும் மருந்து கடைகளில் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். இந்நிலையில் தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள சாந்தி கணேஷ் என்ற தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு 8.30 மணி அளவில் அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று சாந்தி கணேஷ் என்ற தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளார். அப்பொழுது அந்த குழந்தையை பரிசோதனை செய்த பெண் மருத்துவர் இரண்டு டானிக் மருந்துகள் எழுதி கொடுத்து உள்ளார். அதில் ஒரு டானிக் விற்பனைக்கு அல்ல என்று குறிப்பிட்டு இருந்தது. இது குறித்து மருத்துவமனை ஊழியரிடம் கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு அவர் இஷ்டம் இருந்தால் இங்கு வாருங்கள் இல்லையென்றால் போங்கள் என்று கூறி உள்ளார். குழந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக அந்த பணத்தை செலுத்தி மருந்துகளை வாங்கி சென்று உள்ள அவர். மேலும் இதுகுறித்து புகைப்படங்களை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார். அந்தப் படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது. ஏழை, எளிய மக்கள் உயிர் காக்க அரசு மருத்துவமனை மற்றும் மருந்துகள் அரசு இலவசமாக வழங்கி வந்தாலும் அதனை சட்ட விரோதமாக அரசு ஊழியர்களின் உதவியுடன் கள்ள சந்தையில் விற்பனை செய்து அவர்கள் பணத்தைப் பெற்று லாபம் அடைகின்றனர். இது குறித்து மருத்துவத் துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற குற்ற செயலில் ஈடுபடாமல் தடுக்க முடியும் என்பதை அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.