கிரிப்டோ சொத்துகளை நெறிப்படுத்த உலக அளவில் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை – நிர்மலா சீதாராமன்..!

புதுடெல்லி: கிரிப்டோ சொத்துகளை நெறிமுறைப்படுத்த உலக அளவில் ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்க வேண்டும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்வதேச செலவாணி நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவிடம் வலியுறுத்தியுள்ளார்.

இம்மாத இறுதியில் பெங்களூருவில் ஜி20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்களின் சந்திப்பு நடைபெற உள்ளது. இது தொடர்பாக நேற்று நிர்மலா சீதாராமன் ஐஎம்எஃப் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவிடம் காணொலி வாயிலாக உரையாடினார். அப்போது அவர் கிரப்டோ கரன்சி சொத்துகள் தொடர்பாக உலக அளவில் ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்க வேண்டும் என்று வலியுத்தினார்.

இந்த உரையாடல் குறித்துமத்திய அமைச்சகம் கூறியதாவது: ஐஎம்எஃப் நிர்வாக இயக்குநருடனான உரையாடலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அனைவருக்கும் உணவு மற்றும் எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக ஜி20 கொள்கை உருவாக்கத்தில் இந்தியாவுக்கு தேவையான உதவிகளை ஐஎம்எஃப் வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அமைதியான, நிலையான, வளமான உலகத்தை உருவாக்குவதற்கான முன்னெடுப்பை இந்தியா அதன் ஜி20 தலைமைத்துவத்தில் மேற்கொள்ளும். ஜி20 நிகழ்வுகளில் சர்வதேச கடன் பிரிச்சினை குறித்த விவாதம் முதன்மையாக இடம்பெறும். மிகவும் பின்தங்கி இருக்கும் நாடுகளின் குரலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

உலகம் பொருளாதார நெருக்கடியில் பயணித்து வருகிற சூழலிலும் இந்தியாவின் பொருளாதாரம் மேம்பட்ட நிலையில் உள்ளது என்றும் டிஜிட்டல் மயமாக்கத்தில் இந்தியா முன்மாதிரியாக உள்ளது என்றும் கிறிஸ்டலினா ஜார்ஜீவா பாராட்டினார். இவ்வாறு மத்திய நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது