குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்திய முஸ்லிம்கள் வரவேற்க வேண்டும் – அனைத்திந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் பேட்டி .!!

புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தால் முஸ்லிம்களுக்கு பாதிப்பில்லை அதனால் முஸ்லிம்கள் அச்சட்டத்தை எதிர்க்காமல் வரவேற்க வேண்டும் என்று அனைத்திந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா ஷஹாபுதீன் ராஸ்வி பரில்வி வலியுறுத்தியுள்ளார்.

சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தசட்டம் நேற்று (திங்கள் கிழமை) உடனடியாக அமலுக்குவந்த நிலையில் அவர் இக்கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘இந்திய அரசாங்கம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. நான் இச்சட்டத்தை வரவேற்கிறேன். இது எப்போதோ அமலுக்குக் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டியது. தாமதமானாலும் பரவாயில்லை. இப்போதாவது அமலுக்கு வந்ததே என்பதில் மகிழ்ச்சி.

இந்தச் சட்டம் குறித்து இந்திய முஸ்லிம்கள் மத்தியில் நிறைய தவறான புரிதல்கள் இருக்கின்றன. இந்தச் சட்டத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. முன்னதாக பாகிஸ்தான். ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து வரும் முஸ்லிம் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்க ஏதுவாக எவ்விதச் சட்டமும் இல்லை. தங்கள் நாட்டில் மதத்தின் பெயரால் நடந்த அத்துமீறல்களால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு இங்கேயும் குடியுரிமை பெறுவதில் சிக்கல் இருந்தது. இப்போது அதற்கு தீர்வு கிடைத்துள்ளது.

பரவலாக சொல்லப்படுவதுபோல் இந்தச் சட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான இந்திய முஸ்லிம்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். இது எந்த ஒரு முஸ்லிமின் குடியுரிமையையும் பறிக்காது. கடந்த காலங்களில் இச்சட்ட மசோதாவை எதிர்த்துப் போராட்டங்கள் நடந்தன. அவை புரிதல் இல்லாததால் நடந்தன. சில அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் அத்தகைய புரிதலற்ற சூழலை விதைத்தனர். உண்மையில் இந்தியாவில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமும் இந்தச் சட்டத்தை வரவேற்க வேண்டும்,

நம் நாட்டில் சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினர் தூண்டி விடப்படுகின்றனர். யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் ஷரத்து இச்சட்டத்தில் இல்லவே இல்லை. சிஏஏ சட்டம் வங்கதேசத்தில், பாகிஸ்தானில் அவதிப்பட்டு வரும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கவே உள்ளது.’ என்றார்.

 கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்த மதத்தினர், ஜெயின்மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகுக்கிறது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவை முஸ்லிம் நாடுகள் என்பதால் சிஏஏ சட்டத்தில் முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது. இதை ஏற்காமல் 2019 டிசம்பர் முதல் 2020 மார்ச் வரை டெல்லி உட்பட நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. டெல்லியில் பெரும் கலவரம் வெடித்தது. இந்தபோராட்டங்களில் 65-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 3,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சூழலில், சிஏஏ சட்டம் இயற்றப்பட்டு 4 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பாணை வெளியிட்டது.