கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம் : புலியகுளம் முந்தி விநாயகருக்கு 11 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்..!

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் இன்று
கொண்டாடப்பட்டது. மாநகரில் உள்ள பல்வேறு விநாயகர் கோவில்கள், பிரதிஷ்டை
செய்யப்பட்டிருந்த இடங்களில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு விநாயகரை
தரிசனம் செய்தனர்.

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை புலியகுளத்தில் உள்ள முந்தி விநாயகர்
கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து
யாகம் நடைபெற்றது. பின்னர் மஞ்சல், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர்,
பஞ்சாமிரதம் உள்பட 11 வகையான வாசனை திரவியங்களால் சுவாமிக்கு அபிஷேகம்
நடைபெற்றது. பின்னர் முந்தி விநாயகருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. இதில்
பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில்
காத்திருந்து விநாயகரை தரிசனம் செய்தனர். இந்த விநாயகர் 19½ அடி உயரம்,
11½ அகலம், 190 டன் எடை கொண்ட ஒரே கல்லால் செய்யப்பட்ட ஆசியாவிலேயே முதல்
சிலையாகும்.
கோவை அருகேயுள்ள ஈச்சனாரி விநாயகர் கோவிலில் சதுர்த்தியையொட்டி
விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதேபோன்று கோவை
ஆர்.எஸ்.புரம் ரத்தின விநாயகர் கோவிலில் சதுர்த்தியையொட்டி காலை
அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றன. வடவள்ளி ஆபத்சகாய சுந்தர விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன.

இதேபோல், ரேஸ்கோர்ஸ் விநாயகர் கோவில், காந்திபுரம் சித்தி விநாயகர்
கோவில், பேரூர் படித்துறை விநாயகர் கோவில்களிலும், நகரின் பல்வேறு
இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடங்களிலும் திரளான பக்தர்கள்
கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி மாநகரில் பல்வேறு இந்து அமைப்புகளின்
சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அந்தந்த
இடங்களில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகளுக்கு காலை கணபதி ஹோமம்
நடைபெற்றது.
சில இடங்களில் மாலையில் கலை, கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோவை
மாநகரில் இந்து முன்னனி சார்பில் 308 விநாயகர் சிலைகளும், இந்து
மக்கள் கட்சி சார்பில் 187 விநாயகர் சிலைகளும் பிரதிஷ்டை
செய்யப்பட்டிருந்தது. புறநகரில் 1564 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவை சாடிவயல் யானைகள் முகாம், டாப்சிலிப்
கோழிகமுத்தி யானைகள் முகாம், முதுமலை யானைகள் முகாம் ஆகிய முகாம்களில்
உள்ள கும்கி யானைகளுக்கு பூஜைகள் நடத்தப்பட்டன. முகாமில் உள்ள கும்கிகளுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து பழங்கள், சத்து மாவு உள்ளிட்ட சிறப்பு உணவுகளும் வழங்கப்பட்டன. வனச்சரகம் சார்பில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கோவை மாநகர், புறநகர் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள்
வழிபாட்டுக்கு பிறகு விசர்ஜனம் செய்யப்படுகின்றன. இந்த சிலைகள் குறிச்சி
குளம், சிங்காநல்லூர் குளம், முத்தண்ணன் குளங்களிலும், புறநகர்
பகுதிகளில் உள்ள சிலைகள் ஆங்காங்கே உள்ள நீர் நிலைகள், பவானி, காவிரி
ஆறுகளிலும் கரைக்கப்பட உள்ளன. முன்னதாக விநாயகர் சதுர்த்தி விழாவில் அசம்பாவிதங்கள் ஏதும் நேரிடாமல் தடுக்கும் விதமாக மாநகரில் உள்ள சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் இந்த சிலைகள் விசர்ஜனம் செய்யப்படும் வரையிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.