அதிக வட்டி தருவதாக ரூ.3.5 கோடி மோசடி: வெளிநாடு தப்பியவர் விமான நிலையத்தில் வைத்து மடக்கி பிடித்த போலீசார்..!

திருச்சி : மணப்பாறையில், அதிக வட்டி தருவதாக கூறி, 3.5 கோடி ரூபாய் மோசடி செய்தவரை, விமான நிலையத்தில் வைத்து, போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை, நேருஜி நகரை சேர்ந்த வினோத் மற்றும் அவரது நண்பர் காமராஜ் ஆகியோருக்கு, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள மூலனுாரை சேர்ந்த கிருஷ்ணபிரகாஷ், 32, சேலம் மாவட்டம், மாசி நாயக்கன்பட்டியை சேர்ந்த சங்கர் பாபு, 41, ஆகிய இருவரும் அறிமுகமாகி உள்ளனர்.அவர்கள் இருவரும், ஆன்லைனில் தொழில் செய்வதாகவும், ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்தால், மாதம், 15 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாகவும் கூறி, வினோத், காமராஜிடம் 3.5 கோடி ரூபாய் பெற்றுள்ளனர்.அதன் பின், கிருஷ்ணபிரகாஷ், சங்கர் பிரபு ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.
இது தொடர்பாக, கடந்த ஆண்டு டிச. 14 ம் தேதி, வினோத் கொடுத்த புகார்படி, மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து, பணம் மோசடி செய்த இருவரையும் தேடி வந்தனர்.இந்நிலையில், கிருஷ்ணபிரகாஷ் வெளிநாடு தப்பிச் சென்றதால், போலீசார் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து இருந்தனர். நேற்று முன்தினம், இந்தோனேசியாவில் இருந்து விமானத்தில், ஹைத்ராபாத் வந்து இறங்கிய கிருஷ்ணபிரகாைஷ, விமான நிலைய போலீசார் பிடித்து வைத்துக் கொண்டு, மணப்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஹைத்ராபாத் சென்ற மணப்பாறை இன்ஸ்பெக்டர் கோபி தலைமையிலான போலீசார், அவரை கைது செய்து, மணப்பாறைக்கு அழைத்து வந்தனர். நேற்று, மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மணப்பாறை கிளைச் சிறையில் அடைத்தனர். சங்கர்பிரபுவை தேடி வருகின்றனர்.