மூன்றாம் பாலினத்தவருக்கான முதல் பள்ளிவாசல் – வங்கதேசத்தில் திறப்பு.!!

பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பின் மூன்றாம் பாலினத்தவருக்கென பள்ளிவாசல் முதன்முறையாக வங்கதேசத்தில் திறக்கப்பட்டுள்ளது.

உலகளவில் ஆண், பெண் ஆகிய இரண்டு பாலினங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமும், உரிமையும் மூன்றாம் பாலினத்தவர்க்கு முழுமையாக கிடைப்பதில்லை. சமுதாயத்தின் ஏளனமான பார்வை, புறக்கணிப்பு என பல்வேறு துன்பங்களை மூன்றாம் பாலினத்தவர்கள் தினந்தோறும் அனுபவித்து வருகின்றனர். உடலியல் மாற்றம் காரணமாக மூன்றாம் பாலினமாக உருவெடுப்போர் இந்த சமூகத்தில் படும் கஷ்டங்கள் இன்னும் முழுமையாக வெளிப்படுத்தப்படுவதில்லை.

பண்டைய காலங்களோடு ஒப்பிடுகையில், நாகரீக, கலாச்சார முன்னேற்றத்தின் காரணாமாக மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அங்கீகாரம் சிறுக சிறுக கிடைத்து வருகிறது. உலகளவில் மூன்றாம் பாலினத்தவர்கள் மீதான பார்வை மெல்ல மெல்ல மாறி வருகிறது. புறக்கணிப்பை தாண்டி அவர்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலை, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு பின் மனிதர்களிடம் உருவாகி வருகிறது.தெற்காசிய நாடுகள் 2013-ம் ஆண்டிலிருந்து, மூன்றாம் பாலினத்தவர்களால் நிரம்பிய ‘ஹிஜ்ரா’ சமூகத்திற்கு அதிகாரப்பூர்வ அடையாளம் வழங்கி வருகிறது. இந்நிலையில் மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்களுக்கு மேலும் ஒரு அங்கீகாரம் தற்போது கிடைத்துள்ளது.

வங்கதேசத்தில் இஸ்லாம் மதத்தை பின்பற்றும் ‘ஹிஜ்ரா’ சமூக மூன்றாம் பாலினத்தவர்கள், அங்குள்ள பள்ளிவாசல்களில் வழிபாடு செய்யவோ, தொழுகை செய்யவோ அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வங்கதேச தலைநகர் தாகாவின் வடக்குப் பகுதியில், பிரம்மபுத்ரா நதிக்கரையோரம் அமைந்துள்ள மைமன்சிங் நகர் அருகே கட்டப்பட்டுள்ள புதிய பள்ளிவாசலில், மூன்றாம் பாலினத்தவர்கள் தொழுகை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஹிஜ்ரா தொண்டு அமைப்பின் நிறுவனர் முஃப்தி அப்துர் ரஹ்மான் ஆசாத்தின் முன்னெடுப்பில், ஏராளமான ‘ஹிஜ்ரா’ சமூக மூன்றாம் பாலினத்தவர்களின் நிதியுதவியுடன், ‘தக்ஷின் சார் கலிபாரி பள்ளிவாசல்’ என்ற மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பள்ளிவாசல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிவாசல் வங்கதேசம் மட்டுமல்லாமல் உலகிலேயே மூன்றாம் பாலினத்தவர்க்கான முதல் பள்ளிவாசல் ஆகும். உயிரிழந்த மூன்றாம் பாலினத்தவர்கள் உடல்களை புதைப்பதற்கான இடமும் இந்த பள்ளிவாசலின் அருகேயே ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த பள்ளிவாசலில் இமாம் அப்துல் மொதலேப், ‘ஹிஜ்ரா சமூகத்தை சேர்ந்த மூன்றாம் பாலினத்தவர்களும் அல்லாவால் உருவாக்கப்பட்ட மற்ற மனிதர்களைப் போன்றவர்கள் தான். நாம் அனைவருமே மனிதர்கள். சிலர் ஆண்கள், சிலர் பெண்கள். அல்லாஹ் அனைவருக்கும் புனித குர்ஆனை வெளிப்படுத்தினார். எனவே உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் பிரார்த்தனை செய்ய உரிமை உண்டு, யாரையும் மறுக்க முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.மக்களின் ஏராளமான புறக்கணிப்புகளுக்கு பிறகு மூன்றாம் பாலினத்தவர்களுக்காக, மூன்றாம் பாலினத்தவர்களாலேயே உருவாக்கப்பட்டுள்ள இந்த பள்ளிவாசல், மதம், இனம், மொழி, என எல்லாவற்றையும் கடந்து, உலகளவில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான உரிமையை பெற்றுக் கொடுப்பதில் முக்கிய முன்னெடுப்பாக, முயற்சியாக இருக்கும் என்று நம்புவோம்….