நிதி நிறுவனத்தினர் நெருக்கடி- டிஎஸ்பி-யிடம் மகளிர் சுய உதவிக் குழுவினர் புகார்..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கூசாலிபட்டியைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலகத்துக்கு சென்று முற்றுகையிட்டனர். அவர்கள், டிஎஸ்பி வெங்கடேனிடம் புகார் மனு வழங்கினர்.
அதில், ‘‘கூசாலிபட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர் மகளிர் சுய உதவிக்குழுவில் ஏராளமான பெண்களை சேர்த்து மாவு அரைக்கும் எந்திரம் வாங்கி தொழில் செய்வதற்காக கடன் வாங்கி தருவதாக கூறி அனைவரிடமும் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களை சேகரித்தார்.
அதன் மூலம் 15-க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக சுமார் ரூ.30 லட்சம் வரையிலும் கடன் பெற்றுள்ளார். மேலும் அவர் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு தெரியாமலேயே ஓரிரு மாதங்கள் கடன் தவணையை திருப்பி செலுத்தி உள்ளார். பின்னர் அந்த பெண் தலைமறைவாகி விட்டார்.
இந்நிலையில் அந்த பெண், கடன் வாங்கிய நிதி நிறுவனத்தினர் மகளிர் சுயஉதவிக்குழு பெண்களிடம் கடனை திருப்பி தருமாறு கூறி நெருக்கடி அளிக்கின்றனர். கடன்தொகையை பெறாமலே கடனை திருப்பி கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். எனவே இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர். மனுவை பெற்று கொண்ட டிஎஸ்பி வெங்கடேசன் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து மகளிர் சுய உதவிக்குழுவினர் கலைந்து சென்றனர்.