விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் செல்லும் இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது- நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவு..!

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:- விநாயகர் சிலைகளின் பாதுகாப்புக்கு அந்தந்த அமைப்பினரே பொறுப்பேற்க வேண்டும். சிலைகளை கரைக்கும் வரை இரவும், பகலும் குறைந்தபட்சம் 10 நபர்கள், காவல்துறையினருக்கு உதவியாக இருக்க வேண்டும். விநாயகர் சிலை வைக்கும் இடத்தில், பொறுப்பாளர்கள் பெயர், செல்போன் எண்களை ஓர் அட்டையில் எழுதி தொங்கவிட வேண்டும். திறந்த வெளியில் பாதுகாப்பின்றியும், எளிதில் தீப்பிடிக்க கூடிய பழுதான மின் வயர்கள் உள்ள இடத்தில் சிலைகளை வைக்ககூடாது.
சிலை வைக்கப்படும் இடத்தில் மைக் செட் வைக்கக் கூடாது. சிலைகளை கரைக்க செல்லும் வழியில் சட்டவிரோத நடவடிக்கை களிலோ, வேற்று மதத் தினரை இழிவு படுத்தும் செயல்களிலோ ஈடுபடக் கூடாது. ஊர்வல பாதையில் விளம்பர போஸ் டர்கள் ஓட்டுவது, தட்டிகளை வைப்பது மற்றும் துண்டு பிரசுரங்களை வினியோ கிப்பது கூடாது. ஊர்வலத்தை காரணம் காட்டி கடைகள், நிறுவனங்களை மூட வேண்டும் என தொடர்புடைய உரிமையாளர்களை வற்புறுத்த கூடாது. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷ்னி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன் நவாஸ், குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர்கள் சரவண கண்ணன், துரைசாமி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் லிவிங்ஸ்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.