ஈரோடு கிழக்கு தொகுதி- வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை..!

ரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மொத்தம் 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவையொட்டி, அந்தத் தொகுதிக்கு வருகிற 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கிய நிலையில், நேற்று 3 மணியுடன் நிறைவு பெற்றது. தினமும் பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. கடந்த 5ம் தேதி வரையிலான 6 நாட்களில், 59 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். கடைசி நாளான நேற்று அதிமுக வேட்பாளரான தென்னரசு உள்ளிட்ட 37 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை மொத்தமாக 96 பேர் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர், வாபஸ் பெறுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற உள்ளது. வேட்பு மனுக்களை திரும்ப பெற நாளை மறுநாள் கடைசி நாள் என்பதால், அன்று ( பிப்10) பிற்பகல் 3 மணிக்கு பிறகு வேட்பாளர்கள் இறுதிப்பட்டியில் வெளியாக உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.