ஈரோடு இடைத் தேர்தல்… அண்ணாமலையை களமிறக்குங்க… ஓபிஎஸ் யோசனை.. சர்வேயில் இறங்கிய பாஜக..!

ரோடு: இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தமிழ்நாடு பாஜக முடிவெடுப்பதில் தயக்கம் காட்டி வருகிறது.

இந்த நிலையில்தான் நேற்று குஜராத்துக்கு பறந்தார் ஓ பன்னீர்செல்வம். நேற்று இந்த பயணத்தில் அவர் முக்கியமான சில ஆலோசனைகளை மேற்கொண்டு இருக்கிறாராம்.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் ஓ பன்னீர்செல்வம் வேட்பாளரை களமிறக்க முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் என்னுடைய அணி சார்பாக வேட்பாளரை நிறுத்துவேன். நாங்கள்தான் உண்மையான அதிமுக. என்னால் சின்னம் முடங்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

சின்னம் முடங்காமல் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கட்சியில் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. இங்கே வேட்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிப்போம். இன்னொரு பக்கம் பாஜக இங்கே போட்டியிடுகிறது என்றால் நாங்கள் விலகிக்கொள்வோம், என்றுள்ளார். ஓ பன்னீர்செல்வத்தின் இந்த பேட்டி எடப்பாடி பழனிசாமி தரப்பை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

எடப்பாடியை எதிர்த்து தனது வேட்பாளரை நிறுத்துவதை விட, பாஜக போட்டியிட வேண்டும் என்பதில்தான் குறியாக இருக்கிறார் ஓபிஎஸ். குஜராத்தில் பாஜக முக்கியமான தலைவர்களிடம் பேசிய ஓபிஎஸ், “திமுக கூட்டணியில் தேசிய கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது. மூத்த தலைவர் இளங்கோவனை நிறுத்தியுள்ளது காங்கிரஸ். தேசிய கட்சியை எதிர்த்து பாஜக என்கிற தேசிய கட்சிதான் போட்டியிட வேண்டும். தேசிய கட்சியை எதிர்த்து மாநில கட்சிகள் நின்றால் சரிப்பட்டு வராது. அதிமுகவிற்கு இங்கே சான்ஸ் இல்லை. அதிமுகவில் யார் நின்றாலும் திமுக எளிதாக வென்றுவிடும்.

இளங்கோவனை எதிர்த்து அண்ணாமலையை நிறுத்துங்கள். அவர்தான் இந்த தொகுதிக்கு சரியாக இருப்பார். அவர் நின்றால் போட்டி பலமாகும். உங்கள் பாணியில் எடப்பாடியிடம் பேசினால், ஒருவேளை அவரும் பாஜகவை ஆதரிக்கலாம். அந்த சூழல் உருவானால், தேர்தலை புறக்கணித்துள்ள பாமகவும், தேமுதிகவும் பாஜகவை ஆதரிக்கும். மேலும், டி.டி.வி. தினகரனும் பாஜகவை ஆதரிப்பார். அதனால் பாஜகவின் வலிமை அதிகரிக்கும். கூட்டணியின் மொத்த வலிமையையும் புதிய பலம் பெறும். இப்போது எல்லோரும் பிரிந்து கிடக்கிறார்கள்.

பாஜக இங்கே போட்டியிட்டால் திமுக கூட்டணியை தோற்கடித்து விட முடியும். ஒருவேளை ஜெயிக்க முடியாவிட்டாலும், இரண்டாவது இடத்தில் அதிக வாக்குகள் பெற முடியும். அது நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படும். அதிக வாக்கு வங்கி பெற்றால் பாஜக அதிக இடங்களை நாடாளுமன்ற தேர்தலில் பெற வசதியாக இருக்கும். இங்கே போட்டியிடுவதால் பாஜகவிற்கு இழக்க ஒன்றும் இல்லை. அதனால், பாஜக போட்டியிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார் ஓபிஎஸ் !

இவருடைய கருத்தை பாஜகவின் தேசிய தலைமை ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. ஆனால், வேட்பாளர் அண்ணாமலையா? அல்லது வேறு நபரா ? என்பதை ஆலோசிக்கிறதாம். அண்ணாமலையை தவிர்த்தால் கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்த வலிமையான பாஜகவினர் யார் இருக்கிறார் ? செங்குந்த முதலியார் சமுகத்தில் பாஜகவில் வலிமையானவர் யார் இருக்கிறார் ? என்ற தேடுதலும் துவங்கியுள்ளது. இதற்கிடையே, தொகுதியை சர்வே எடுக்க தனியார் ஏஜென்சியிடம் சொல்லியிருந்தார் அண்ணாமலை.

அந்த ரிசல்ட் இன்று அவரிடம் தரப்படும் என சொல்லப்படுகிறது. அதன் முடிவின்படி தனது கருத்தை மேலிடத்துக்கு தெரிவிக்க தயாராகியுள்ளார் அண்ணாமலை. இந்த நிலையில், ஓபிஎஸ்சின் குஜராத் பயணத்தில் நடந்ததை அறிந்து கொண்டிருக்கும் எடப்பாடி, பாஜக போட்டியிட்டால் என்ன செய்யலாம் என மூத்த தலைவர்களிடம் ஆலோசித்துள்ளார். எது நடந்தாலும் போட்டியிடுவதிலிருந்து விலகக் கூடாது என சீனியர்கள் சொல்லியிருக்கிறார்கள். சின்னமே முடக்கப்பட்டாலும் போட்டியிட்டே ஆக வேண்டும் என எடப்பாடியிடம் வலுயுறுத்தியிருக்கிறார்கள்.