ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து அவசர சட்டம்?.. மாஜி நீதிபதி சந்துரு முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பிப்பு..!!

சென்னை: ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அமைக்கப்பட்ட பரிந்துரை குழு முதல்வரிடம் அறிக்கையை சமர்ப்பித்தது.

தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தொடர்ச்சியாக பல லட்சம் பணத்தை இழந்ததால் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இது, சாதாரண, நடுத்தர குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி வங்கி அதிகாரிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள், காவல் துறையில் பணியாற்றுபவர்கள் உள்ளிட்டவர்களும் தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பலரும் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிப்பது குறித்து அவசர சட்டம் பிறப்பிப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த குழுவில் ஐ.ஐ.டி. தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனரும், உளவியலாளருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார், கூடுதல் டி.ஜி.பி. வினித் தேவ் வான்கடே ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையிலான குழு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை சமர்ப்பித்தது. தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்க சட்டம் இயற்றப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.