சதிவலையைப் பின்னியவர்களுக்கு அதிமுக தொண்டர்கள் உரிய தண்டனை அளிப்பார்கள்- மதுரையில் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி..!

அ.தி.மு.க.வில் உட்கட்சிப் பூசல் தீவிரமடைந்துள்ள நிலையில், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று  (26/06/2022) சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் இருந்து கார் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.

பின்னர், அங்கிருந்து விமானம் மூலம் மதுரைக்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “அ.தி.மு.க. தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர்; தொண்டர்களுக்காகவே நான் இருப்பேன். அ.தி.மு.க.வில் அசாதாரணமான சூழ்நிலையை ஏற்படுத்திய நபர்களுக்கு மக்கள் தண்டனை அளிப்பார்கள். சதிவலையைப் பின்னியவர்களுக்கு தொண்டர்களும், மக்களும் உரிய தண்டனையை அளிப்பார்கள். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மனதில் இருந்து என்னை யாராலும் நீக்க முடியாது. ஓ.பி.எஸ். என்ற தொண்டன் கிடைத்தது என் பாக்கியம் என ஜெயலலிதா சான்றிதழ் அளித்துள்ளார். என்னுடைய எதிர்காலத்தை அ.தி.மு.க. தொண்டர்களும், மக்களும் தீர்மானிப்பார்கள். எல்லா சிக்கலும் விரைவில் தீரும்; சிக்கலுக்கு காரணம் யார் என்பதும் எனக்கு தெரியும்” எனத் தெரிவித்தார்.

தேனியில் உள்ள இல்லத்திற்கு செல்லும் ஓ.பன்னீர்செல்வம், அந்த மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.