லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு – கேரள மாநிலங்களின் காவல் உயர் அதிகாரிகள் ஒருங்கிணைப்பு கூட்டம்.!!

கோவை : வருகிற 2024 லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய உயர் அதிகாரிகளுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.. கூட்டத்துக்கு மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பவானிஸ்வரி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் வருகின்ற 2024 லோக்சபா தேர்தலை சுமூகமான முறையில் நடத்திடுவது பற்றியும், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நிலவும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் பற்றியும், இரு மாநிலங்களுக்கிடையே நடைபெறும் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் மதுபானங்கள் கடத்தல்கள் நடமாட்டத்தை குறைப்பது பற்றியும்,ஆலோசிக்கப்பட்டது.

மேலும் தேர்தலின்  போது குழப்பம் ஏற்படுத்தி வன்முறையை தூண்டி தேர்தலை சீர் குலைக்கும் எண்ணத்தை உடையவர்களை கண்காணிப்பது பற்றியும், மாநிலங்களுக்கிடையான நுண்ணறிவு தகவல்களை பகிர்வது பற்றியும், தேர்தலின் போது மாநில எல்லைகளில் நடைபெறும் குற்றங்களை தடுத்திட சோதனை சாவடிகள் மற்றும் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைப்பது பற்றியும், வாக்காளர்களை அச்சுறுத்தும் இயக்கங்கள் பற்றியும், தேர்தலின் போது ஏற்படும் சிக்கல்கள் பற்றியும் இக்கலந்தாய்வு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணசுந்தர், கேரளா மாநில திருச்சூர் சரக காவல்துறை துணைத் தலைவர் அஜுதா பேகம், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன்,திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.அபிஷேக் குப்தா,பாலக்காடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஆனந்த் மற்றும் திருச்சூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நவநீத ஷர்மா, ,கோவை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவி கலால் ஆணையர் ஆகியோர் மேற்படி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.