பல பெண்களுடன் இருக்கும் சர்ச்சைப் புகைப்படங்கள்..பாலியல் புகார் வந்தால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்-ஒலிம்பிக் சங்கப் பொருளாளர் பரபரப்பு பேச்சு.!

ந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) பொருளாளரும், உத்தரப்பிரதேச ஒலிம்பிக் சங்கச் செயலாளருமான ஆனந்தேஸ்வர் பாண்டே, பல பெண்களுடன் தனிமையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன.

இந்த நிலையில், உயர் பதவியில் இருக்கும் விளையாட்டுத்துறை அதிகாரி ஆனந்தேஸ்வர் பாண்டேவின் இத்தகைய சர்ச்சையான புகைப்படங்கள் குறித்து, லக்னோ பிராந்திய விளையாட்டு உயரதிகாரிகள் கடந்த வாரம் அவரிடம் விளக்கம் கேட்டிருக்கின்றனர். மேலும், அவர்மீது முதலமைச்சரின் போர்ட்டலிலும் புகார் அளிக்கப்பட்டு, அந்தப் புகார் கடிதத்தின் நகல் மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது.

அந்தக் கடிதத்தில், “ஆனந்தேஷ்வர் பாண்டே லக்னோவில் உள்ள கே.டி.சிங் பாபு ஸ்டேடியத்தில் தங்கியிருந்திருக்கிறார். அதனருகில் பெண்கள் விடுதி இருக்கிறது. அவர் சில பெண்களுடன் தனிமையில் இருப்பதாகப் பகிரப்படும் புகைப்படங்கள் உத்தரப்பிரதேசத்துக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தியிருக்கின்றன. எனவே அவரிடம் தகுந்த விசாரணை மேற்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக கடந்த செவ்வாயன்று லக்னோ காவல்துறையின் சைபர் செல்லில் புகாரளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்தேஸ்வர் பாண்டே, “எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஒரு சதித்திட்டம்.

விளையாட்டுத்துறையில் என் இமேஜைக் கெடுக்க என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பயன்படுத்தப்பட்டது வருத்தமளிக்கிறது. யாரோ என்னை அவதூறாகப் பேசுகிறார்கள். பெயர் தெரியாத நபர்கள்மீது நான் புகார் அளித்திருக்கிறேன். ஆனால் இது ஓர் அரசியல் சதி, இதற்குப் பின்னால் ஒரு பெரிய நபரின் கை இருக்க வேண்டும். பயிற்சிக்கு வரும் விளையாட்டு வீரர்கள் யாராவது எனக்கு எதிராகப் புகார் அளித்தால், என்னைத் தூக்கிலிடுங்கள். அவ்வளவு ஏன்… நானே தற்கொலை செய்து கொள்கிறேன். நான் 1970-லிருந்து விளையாட்டுத்துறையில் இருக்கிறேன். இது போன்ற சம்பவம் எதுவும் நடந்ததில்லை” என விளக்கமளித்திருக்கிறார்.