ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.83 லட்சம் ரொக்கம், 305 கிராம் தங்கம் காணிக்கை..!!

திருச்சி: ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.83 லட்சம் ரொக்கம், தங்கம் 305 கிராம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருக்கும். இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பிரசித்தி பெற்றதாகும். பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் சொர்க்க வாசலை கடந்து செல்கின்றனர். அதுபோல் தைத்தேர் திருவிழா, சித்திரை தேர்த்திருவிழா போன்றவையும் பிரசித்தி பெற்றது. இந்நிலையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஒவ்வொரு மாதம் இறுதியில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள் திறந்து எண்ணப்படும்.

அதேபோல் நேற்று ஸ்ரீரங்கம் கோயிலில் கருடாழ்வார் சன்னதியில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் மலைக்கோட்டை தாயுமானவர்சாமி கோயில் உதவி ஆணையர் ஹரிஹரசுப்ரமணியன், ஸ்ரீரங்கம் கோயில் மேலாளர் தமிழ்செல்வி மேற்பார்வையில் கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் பக்தர்கள் காணிக்கையாக ரொக்கம் ரூ.83லட்சத்து 45ஆயிரத்து 468, தங்கம் 305 கிராம், வெள்ளி 1534 கிராம் மற்றும் வெளிநாட்டு கரன்சி 178 ஆகியவை இருந்தது.