போக்குவரத்து நெரிசலில் நேரு வீதி… தவிக்கும் பொதுமக்கள்… வேதனையில் வியாபாரிகள்… கண்டு கொள்ளுமா புதுச்சேரி அரசு..?

புதுச்சேரியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக் கொண்டிருக்கிறது நேரு வீதிக்கு ஷாப்பிங் வரவே அஞ்சும் அளவு வாகனங்களை நிறுத்த இடமின்றி தத்தளிக்கும் நிலை நீண்ட நேரம் தேடியும் இடமின்றி, அவசரத்திற்கு வாகனங்களை ஒரிடத்தில் நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டால், டிராபிக் ஜாம் ஆகி போலீஸார் வாகனங்களை பறிமுதல் செய்யும் நிலை. இது தான் எல்லோரும் அறிந்த பொது மக்களின் இன்றைய அவல நிலை.

அதற்கு ஒரு படி மேல், புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சியை நம்பி, இங்கு வரும் வெளிமாநில பயணிகள் வாகன நிறுத்த இடமின்றி படும் பாடு சொல்லி மாளாது. இங்கு ஷாப்பிங்கையே வெறுத்து விட்டு, ஏதோ சுற்றி பார்த்து விட்டு சென்று விடுகின்றனர்.

அவர்களையெல்லாம் நம்பி, பொது மக்களும், சுற்றுலா பயணிகளும் வியாபாரம் செய்ய வருவார்கள் என்ற எதிர்பார்ப்போடு, சரக்குகளை பல லட்சங்கள் விலை கொடுத்து வாங்கி, ஆவலோடு காத்திருக்கும் வியாபாரிகளின் நிலை அதை விட பரிதாபம். வாடிக்கையாளர்கள் யாரும் வீட்டிலிருந்து நடத்து வருவதில்லை. பெரும்பாலும் சொந்த வாகனங்களில் தான் வருகிறார்கள், அப்படி வரக்கூடியவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த இடமின்றி, ஷாப்பிங் வரவே அச்சப்பட்டு ஒரு முறைக்கு பல முறை யோசித்து தயங்குகிறார்கள். இப்போது இருக்கும் வியாபார மந்த நிலையிக்கு மத்தியில், இந்நிலை வியாபாரிகளுக்கு எவ்வளவு பெரிய நெருக்கடியை தரும் என்பதை அரசு சற்று தாயுள்ளத்துடன் யோசித்துப் பார்க்குமா?!.

இதற்கு ஒரே தீர்வாக, அனைவரும் ஆவலோடு பல வருடங்களாக எதிர்பார்த்து காத்திருந்த, நேரு வீதி பஜாருக்கான ஒரே விசாலமான பார்க்கிங் இடமாக மாற்றப்பட்ட சிறை வளாகம் ஒரு ஆறுதலாக அமைந்தது. அப்படி மாறியும் பார்க்கிங் இடப்பற்றா குறை இருந்து வந்தது. மக்களின் இந்த சிரமத்தை போக்க, சிறை வளாகத்தில் ஐந்து அடுக்கு நவீன பார்கிங் கட்டுமான திட்ட அறிவிப்பு பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் பெரும் மகிழ்வை தந்து, நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால் இப்போது அந்த மகிழ்ச்சியில் இடி விழுந்தார் போன்று – அத்திட்டம் கைவிடப்பட்டு, இருக்கும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கே வாகன நிறுத்துமிடமின்றி போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலையில், சிறை வளாகத்தில் பார்கிங்கிற்கு பதிலாக வணிக வளாகம் கட்டப்பட உள்ளது என்ற அறிவிப்பு பேரிடியாக வந்து விழுந்துள்ளது.

நேரு வீதியின் பார்கிங் தட்டுப்பாடின் உண்மை நிலையை பற்றி, அரசு போக்குவரத்துக் காவல் துறையிடமே கேட்டு உறுதி செய்து கொள்ளலாம் ஒவ்வொரு நாளும் எவ்வளவு பார்கிங் பைன்கள், எவ்வளவு வெஹிகல் ஸீஸ், எவ்வளவு போக்குவரத்து நெரிசல்…

எனவே, மக்களின் இந்த சிரமங்களை கவனத்தில் கொண்டு, வணிக வளாகங்கள் கட்ட புதுச்சேரியில் எவ்வளவோ இடமுண்டு, ஆனால் நேரு வீதி-பஜாருக்கு விசாலமான ஒரே பார்கிங் இடம், மையப்பகுதியில் அமைந்துள்ள சிறை வளாகம் மட்டுமே எனவே அரசு தாயுள்ளத்துடன் இதை கவனத்தில் கொண்டு, பழையபடியே அங்கு ஐந்து அடுக்கு பார்கிங் வளாகம் கட்டி, புதுச்சேரி பொது மக்கள் நிம்மதியடைய, சுற்றுலா பயணிகள் ஷாப்பிங் செய்து மகிழ, வியாபாரிகள் பயனடைய, அதன் மூலம் புதுச்சேரி அரசின் வருமானம் பெருமளவு வளர்ச்சி அடையும் என நம்புகிறோம்.

இல்லை எனில், பொது மக்களும், வியாபாரிகளும் இதை போராடியேனும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டியது கட்டாயம் ஏற்பட்டுள்ளது என வியாபாரிகளும், பொதுமக்களும் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.