2 மாதங்களுக்கு பிறகு.. கோவை குற்றாலம் இன்று மீண்டும் திறப்பு-செம குஷியில் சுற்றுலா பயணிகள்..!!

கோவை மாவட்டத்தில் முக்கிய சுற்றலா தளங்களில் கோவை குற்றால அருவி ஒன்றாகும். இங்கு உள்ளூர், வெளியூர் மக்கள் மற்றும் வெளி நாட்டு சுற்றலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர்.

அருவியில் குளித்து மகிழ்ந்தும், தொங்கு பாலத்தில் நடந்து சென்றும் இயற்கையை ரசித்து சுற்றலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இங்கு வரும் சுற்றலா பயணிகள் வனத்துறையின் தனி வாகனத்தில் அழைத்து செல்லப்படுவார்கள். அதற்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் கோவை குற்றாலத்தில் அவ்வபோது வெள்ள பெருக்கு ஏற்படுவது வழக்கம். இதனை வனத்துறையினர் கண்காணித்து நீரின் வரத்து அதிகரித்தால் சுற்றலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்படும்.

கடந்த சில மாதங்களாக கோவை குற்றாலத்தில் அவ்வபோது பலத்த மழையும், சாரல் மழையும் பெய்து வந்தது. இதனால் அருவியில் வெள்ள பெருக்கு ஏற்படும் போது எல்லாம் சுற்றுலா பயனிகளுக்கு தடை விதிக்கப்பட்டு வந்தது. இவ்வாறு கடந்த ஜூலை மாதம் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இதனால் கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த 2 மாதமாக அருவிக்கு செல்ல அனுமதி அளிக்கவில்லை.

இந்நிலையில், தற்போது அருவியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. மேலும் காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை என தொடர் விடுமுறை வரவுள்ளது. இதனை அடுத்து இன்று (27-ந் தேதி) முதல் கோவை குற்றாலம் திறக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காலை 10 மணி முதல் 11 மணி வரையும், 11.30 மணி முதல் 12.30 மணி வரையும், மதியம் 1 மணி முதல் 2 மணி வரை என்ற கால அட்டவணையின் அடிப்படையில் அருவிக்கு செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர்.