6 பேரிடம் அரிசி, தேங்காய் எண்ணெய் வாங்கி ரூ.6.64 லட்சம் மோசடி – கோவை வியாபாரி கைது

கோவை சவுரிபாளையம், கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் பாபு என்ற கோபி (வயது 40) இவர் பொங்கல் பண்டிகைக்காக உடையாம்பாளையத்தில் கடை நடத்திவரும் பவித்திரன் என்பவரிடம் ரூ 32,490 ஆயிரத்துக்கு தேங்காய் எண்ணெய் ,கடலை எண்ணெய் வாங்கினார். ஆனால் அதற்குரிய பணத்தை கொடுக்கவில்லை. அதேபோன்று இவர் அன்னூரைசேர்ந்த தனபால் என்பவரிடம் ரூ 1 லட்சத்து, 10ஆயிரத்துக்கு தேங்காய் எண்ணெய்வாங்கினார். மேலும் பு.புளியம்பட்டியை சேர்ந்த கார்த்திகேயனிடம் ரூ 1 லட்சத்து 56 ஆயிரத்துக்கு அரிசி, தேங்காய் எண்ணெய் வாங்கினார். அதற்குரிய பணத்தையும் அவர் கொடுக்கவில்லை. இதனால் பொருட்கள் கொடுத்து ஏமாந்தவர்கள் பலமுறை கோபியிடம் பணத்தை கேட்டனர். ஆனால் அவர் எந்த பதிலும் சொல்லவில்லை. மேலும் அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் போலீசார் கோபி மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் அவர் 6 பேரிடம் மொத்தம் ரூ.6 லட்சத்து 64ஆயிரத்துக்கு, அரிசி, வெல்லம், கரும்பு, மற்றும் எண்ணெய் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கோபியை நேற்றுகைது செய்தனர் .பின்னர் அவர் நீதிமன்றத்தில்ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.