கல்லூரி மாணவியிடம் செல்போன் பறிப்பு: மாணவர்களுடன் சேர்ந்து போலீசார் சிறுவன் உள்பட 2 பேரை மடக்கி பிடித்தனர்..!!

நீலகிரி கொலக்கம்பையை சேர்ந்தவர் சாரிகா (வயது 19). இவர் கோவை மதுக்கரையில் விடுதியில் தங்கி அங்குள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் நேற்று மாலை கல்லூரி முடிந்து தனது தோழியுடன் பொள்ளாச்சி- கோவை ரோட்டில் விடுதிக்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர் திடீரென சாரிகாவின் அருகில் வந்து அவரது கையில் இருந்த செல்போனை பறித்து தப்பினர். இதைகண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து அவர் தனது கல்லூரி நண்பர்களிடம் கூறினார்.
அவர்கள் மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ரோந்து பணியில் இருந்த மதுக்கரை போலீசார் கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து செல்போனை பறித்த வாலிபர்களை துரத்தி சென்றனர். பின்னர் போலீசார் கல்லூரி மாணவர்களின் உதவியுடன் 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர். அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கிணத்துக்கடவு சோலவம்பாளையத்தை சேர்ந்த பிரவின் ராஜ் (21) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், அவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சாரிகா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவின் ராஜை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.