கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட சமயபுரம், நெல்லித்துரை, குரும்பனூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு அருகிலும் விளைநிலங்களிலும் புகுந்து வருகிறது.
இதில் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி சாலையில் சமயபுரம் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த சமயபுரம் கிராமப் பகுதியின் சாலை வழியாக காட்டு யானைகள் கல்லார் வன பகுதிக்கு தண்ணீர் குடிக்க செல்வது வழக்கமாக கொண்டு உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறி காட்டு யானை ஒன்று மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி சாலையில் சிறிது நேரம் உலா வந்தது. பின்னர் சமயபுரம் கிராமத்திற்குள் நுழைந்தது.
அந்த காட்டு யானையை அப்பகுதி மக்கள் சிலர் போ சாமி போ என அன்புடன் கூறி கொண்டு இருந்தனர்.அப்போது திடீரென பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டது. அங்கு யானையை விரட்ட வந்த வனத்துறையினர் பட்டாசுகளை வெடிக்க செய்தது தெரியவந்தது.
இதனால் அந்த யானை விரு விருவென கிராம சாலையில் ஓடியது.பின்னர் புதருக்குள் புகுந்து வனப்பகுதிக்கு சென்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோர்ட்டு யானைகளை விரட்ட பட்டாசுகளை வெடிக்க கூடாது என உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் அதனை மீறி காட்டு யானைகள் மீது வனத்துறையினர் பட்டாசை வீசி விரட்டிய சம்பவம் வன ஆர்வளர்கள், பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply