கோவையில் பேருந்து நிறுவன உரிமையாளர் வீட்டில் தங்க நகைகள், பொருட்கள்  கொள்ளை – நோட்டமிட்ட மர்ம நபர்கள் கைவரிசை….

கோவையில் பேருந்து நிறுவன உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 40 சவரன் தங்க நகைகள் 16 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கைவரிசை….

கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை அடுத்துள்ள கிரெளன் சிட்டி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார்(30). பேருந்து நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார்.இவரது மனைவி சங்கமித்ரா(29).இத்தம்பதிக்கு 10 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்த நிலையில் நந்தகுமாருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.இதனால் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.இதனால் வீட்டில் யாரும் இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் சிகிச்சை முடித்து விட்டு நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார்.அப்போது,வீட்டின் முன்புற கேட் அப்படியே இருந்துள்ளது.உள்ளே சென்ற அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டின் உட்புற கிரில் கேட் மற்றும் கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

உள்ளே சென்று பார்த்த பொழுது வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 40 சவரன் தங்க நகைகள் மற்றும் 16 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து இச்சம்பவம் குறித்து கோவில்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் தடயங்களை சேகரித்ததுடன்,அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும்,வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து வீட்டின் உள்ளே புகுந்து 40 சவரன் தங்க நகைகள் மற்றும் 16 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.