விவசாய போராட்டம் தீவிரமாக நடந்த மேற்கு உ.பி… மொத்தமாக தூக்கிய பாஜக-ஏமாற்றத்தில் அகிலேஷ் கட்சி…

லக்னோ: விவசாயிகள் போராட்டம் மிகத் தீவிரமாக நடைபெற்ற இடங்களில் ஒன்றான  மேற்கு உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் பாஜகவே அதிகப்படியான இடங்களைக் கைப்பற்றுகிறது

உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 7 கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது.

அங்கு மொத்தம் 403 இடங்கள் உள்ள நிலையில், ஒரு கட்சி ஆட்சியை அமைக்கக் குறைந்தது 202 இடங்களில் வெல்ல வேண்டும்.

தேர்தல் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பு, பாஜக அமைச்சர்கள் உட்பட பல எம்எல்ஏக்கள் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர். இதனால் சமாஜ்வாதி கட்சி இந்தத் தேர்தலில் வெல்ல வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும், தற்போது வரை வெளியான தேர்தல் முடிவுகளில் பாஜகவே தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 403 இடங்களில் பாஜக 269 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சமஜ்வாதி கட்சி 125 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. ஒரு கட்டத்தில் ஆளும் கட்சியாக இருந்த பகுஜன் சமாஜும் 3 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இரு ஆண்டுகளாகப் பிரியங்கா காந்தி உபி-இல் முகாமிட்டிருந்த நிலையில், அக்கட்சி 3 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

இந்தத் தேர்தலில் எப்படியாவது வென்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் அகிலேஷ் களமிறங்கினார். இதற்காகத் தான் இதர பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளையும் தன்னுடன் இணைத்துக் கொண்டார் அதேபோல மேற்கு உத்தரப் பிரதேசமும் பாஜகவுக்கு எதிராகவே வாக்களிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அங்கு ஜாட் விவசாயிகளின் வாக்குகளைக் கவர ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியுடனும் அவர் கூட்டணி வைத்தார்.

மேலும், சுமார் ஓராண்டாக நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்திலும் மேற்கு உபி-இல் இருந்து அதிகளவில் விவசாயிகள் பங்கேற்றனர். இதனால், மேற்கு உத்தரப் பிரதேசத்தில் மக்கள் பாஜகவுக்கு எதிராகவே இருந்ததாகக் கூறப்பட்டது. மேற்கு உத்தரப் பிரதேசத்தில் முதல் இரு கட்டங்களில் வாக்குப்பதிவு நடத்தப்பட்ட நிலையில், முதல் கட்டத்தில் 62.54% வாக்குகளும் இரண்டாம் கட்டத்தில் 64.66% வாக்குகளும் பதிவாக இருந்தன. இந்தப் பகுதியில் கிடைக்கும் வாக்குகள் அகிலேஷுக்கு பூஸ்ட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் தேர்தல் முடிவுகள் அதற்கு நேர் மாறாக உள்ளது. மேற்கு உத்தரப் பிரதேச பகுதியில் மொத்தம் 136 இடங்கள் உள்ள நிலையில், அதில் வெறும் 37 தொகுதிகளில் மட்டுமே சமாஜ்வாதியால் முன்னிலை பெற முடிந்துள்ளது. அதேநேரம் பாஜக மேற்கு உபி-ல் சமாஜ்வாதி கட்சியை விட 3 மடங்கு, அதாவது 93 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சமாஜ்வாதி கட்சியின் கூட்டணியான ராஷ்ட்ரிய லோக் தளம் 6 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

ஒரு ஆண்டுக்கு மேலாக நடந்த விவசாயிகள் போராட்டத்தில் தீவிரமாகக் கலந்து கொண்ட விவசாயிகள் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தான். மூத்த விவசாய தலைவரான ராகேஷ் டிக்கைட் கூட இப்பகுதியைச் சேர்ந்தவர் தான். குறைந்தபட்ச விலை உள்ளிட்ட பல விவகாரங்களில் பாஜக தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனக் கூறி, விவசாய அமைப்புகள் தேர்தலுக்கு சில காலம் முன்பு கூட மீண்டும் போராட்டத்தைத் தொடங்க உள்ளதாக விவசாய அமைப்புகள் அறிவித்து இங்கு நினைவு கூரத்தக்கது.

சமாஜ்வாதி கட்சிக்கு பூஸ்ட தரும் என்று எதிர்பார்க்கப்பட்ட மேற்கு உத்தரப் பிரதேசம். பாஜகவின் மாபெரும் வெற்றியையே உறுதி செய்துள்ளது. ஜாட் சமூகத்தினரின் வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காக அகிலேஷ் யாதவ் ராஷ்ட்ரிய லோக் தளத்துடன் கூட்டணி அமைத்த போதிலும், அது அவருக்குக் கைகொடுக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். சமாஜ்வாதி- ராஷ்ட்ரிய லோக் தளம் கூட்டணியை முரணாகப் பார்த்த அப்பகுதி மக்கள், தங்கள் வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் பகவுக்கு வாக்களித்து வெற்றியை உறுதி செய்துள்ளனர்.