திருச்சியில் உதவி பேராசிரியர்கள் கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்.!!

திருச்சி அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் உதவிப் பேராசிரியா்கள் நிலை 10 இல் இருந்து 11 இல் இருந்து  12 இல் இருந்து 13 ஏ (இணைப்பேராசிரியா்) ஆகியோருக்கான பணி உயா்வு தகுதி ஆணையை தமிழக அரசின் உயா் கல்வித்துறை வழங்கி 6 மாதமாகியும், நிதிநிலையைக் காரணம் காட்டி அதற்குரிய ஊதிய உயா்வை இதுவரை சம்பளத்தில் சோக்கவில்லையாம். இதைக் கண்டித்து அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா் சங்கம் (ஆக்டா) மாநில பொதுச்செயலா் எஸ். சகாயசதீஷ் தலைமையில், மாநில பொருளாளா் முகமது ஷானவாஸ், மண்டலத் தலைவா் பிரான்சிஸ் சேவியா், செயலா் மாரிமுத்து என சுமாா் 50 க்கும் மேற்பட்ட கல்லூரிப் பேராசிரியா்கள் காஜாமலை பகுதியில் உள்ள திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநரக அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது மாலையில் அலுவலகம் முடிந்து வீடு செல்ல முயன்ற கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் குணசேகரன் மற்றும் 20க்கும் மேற்பட்ட அலுவலகப் பணியாளா்கள் வெளியே வர இயலாத வகையில் சூழ்ந்துகொண்டனா். தகவலறிந்த கேகே நகா் போலீஸாா் சென்று பேச்சு நடத்தினா். பின்னா் அலுவலக மகளிா் பணியாளா்களை மட்டும் வெளியே செல்ல அனுமதித்தனா். தொடா்ந்து இரவும் போராட்டம் தொடா்ந்தது.  அப்போது கேகே நகா் காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து, சென்னையில் கல்லூரிக் கல்வி இயக்குநரை சந்திப்பது என போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இதுகுறித்து ஆக்டா பொதுச்செயலா் எஸ். சகாயசதீஷ் கூறுகையில், திருச்சி மண்டலக் கல்லூரி கல்வி இணை இயக்குநரகக் கட்டுப்பாட்டில், 8 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 350க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியா்கள் மற்றும் பேராசிரியா்கள் உள்ளனா். இதில் 100க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். அரசாணைப்படி புதிய ஊதிய உயா்வை பிப்ரவரி சம்பளத்தில் சோத்து வழங்கினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்றாா்.