நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடு.. பிப்ரவரி 23-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர்.!!

சென்னை: 18-வது லோக்சபா தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வரும் 23-ந் தேதி தமிழ்நாடு வருகை தருகிறார்.

தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆலோசனை நடத்துவார். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், காவல்துறை அதிகாரிகளுடனும் ராஜீவ் குமார் ஆலோசனை மேற்கொள்வார்.

2019-ம் ஆண்டு 17-வது லோக்சபா தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. 17-வது லோக்சபா தேர்தலானது 2019-ம் ஆண்டு ஏப்ரல் 11 முதல் மே 19-ந் தேதி வரை நடைபெற்றது. லோக்சபா தேர்தல் முடிவுகள் மே 23-ந் தேதி அறிவிக்கப்பட்டன.

மீண்டும் பாஜக ஆட்சி: லோக்சபாவில் மொத்தம் 543 இடங்கள். பெரும்பான்மைக்கு தேவை 272. 2019-ம் ஆண்டு 17-வது லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 353 இடங்களில் வென்று 2-வது முறையாக ஆட்சியைத் தக்க வைத்தது. பாஜக மட்டும் 303 இடங்களில் வென்றது. காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் வென்றது. காங்கிரஸ் கட்சி19.49% வாக்குகள் பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு மொத்தம் 91 இடங்கள் கிடைத்தன.

எதிர்க்கட்சியும் இல்லை, துணை சபாநாயகரும் இல்லை: 17-வது லோக்சபா சபாநாயகராக ஓம் பிர்லா பதவி வகித்தார். ஆனால் 5 ஆண்டுகாலமும் லோக்சபா துணை சபாநாயகர் இல்லாமலேயே நடத்தப்பட்டது. லோக்சபாவில் பிரதான எதிர்க்கட்சி எதுவும் இல்லை. 55 எம்.பிக்களை எந்த கட்சியும் பெறாததால் லோக்சபாவில் எதிர்க்கட்சி அந்தஸ்தை எந்த கட்சியும் பெறவில்லை.

17-வது லோக்சபா: 17-வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடர் 2019-ம் ஆண்டு ஜூலை 19-ந் தேதி தொடங்கியது. கடந்த பிப்ரவரி 10-ந் தேதி 17-வது லோக்சபாவின் இறுதிக் கூட்டம் நிறைவடைந்தது. 17-வது லோக்சபா பதவி காலத்தில் மொத்தம் 222 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. 729 தனிநபர் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. முத்தலாக் தடை, ஜம்மு காஷ்மீரின் 370-வது பிரிவு ரத்து, குடியுரிமை திருத்த சட்டம், பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா உள்ளிட்டவை 17-வது லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டன.

18-வது லோக்சபா தேர்தல்: நாடு தற்போது 18-வது லோக்சபா தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது. 18-வது லோக்சபா தேர்தல் ஏப்ரல் 2-வது வாரம் தொடங்கி மே 2-வது வாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

97 கோடி வாக்காளர்கள்: 18-வது லோக்சபா தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அனைத்து மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 18-வது லோக்சபா தேர்தலில் மொத்தம் 97 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். உலகிலேயே அதிகமான வாக்காளர்களைக் கொண்ட நாடு நமது இந்தியா.

தமிழ்நாட்டு வாக்காளர்கள்: தமிழாட்டில் மொத்தம் 39 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இவற்றில் 7 தனித் தொகுதிகள். தமிழ்நாட்டின் மிகப் பெரிய லோக்சபா தொகுதி ஶ்ரீபெரும்புதூர். மிகச் சிறிய லோக்சபா தொகுதி மத்திய சென்னை. 18-வது லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் மொத்த எண்ணிக்கை 6,18,90,034. இவர்களில் பெண்கள் 3,14,85,724; ஆண்கள் 3,03,96,330; 3-ம் பாலினத்தவர் 8,294, மாற்றுத்திறனாளிகள் 4,32,805 உள்ளனர். 2019-ம் ஆண்டு 17-வது லோக்சபா தேர்தலில் 71.87% வாக்குகள் பதிவாகி இருந்தன.

பிப்.23-ல் ராஜீவ் குமார் வருகை: இந்த நிலையில் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வரும் 23-ந் தேதி தமிழ்நாடு வருகை தருகிறார். தமிழ்நாட்டில் பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் தேர்தல் அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஏற்பாடுகள், தேர்தலை ஒட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆலோசனை நடத்த உள்ளார்.