வேகமாக சரியும் பவானிசாகர் அணை நீர்மட்டம் – விவசாயிகள் வேதனை.!!

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் அணையில் நீர் இருப்பு குறைவாக இருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக 2300 கன அடி தண்ணீரும், பவானி ஆற்றில் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக 600 கன அடி தண்ணீரும் என மொத்தம் 2900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பின் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 69.57 அடியாகவும், நீர் இருப்பு 10.7 டிஎம்சி ஆகவும் இருந்தது. அணைக்கு நீர் வரத்து 634 கன அடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக 2900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கீழ்பவானி பாசன பகுதிகளில் தற்போது விவசாயிகள் நெல் நடவு பணி மேற்கொண்டு வரும் நிலையில் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதால் பாசனப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.