தாளவாடி மலைப்பகுதியில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற கர்நாடகாவை சேர்ந்த இருவர் கைது..!

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ளது. மலை கிராமங்களில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அரிசியை சிலர் சட்டவிரோதமாக கர்நாடக மாநிலத்திற்கு சென்று கடத்திச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதற்கிடையே மெட்டல்வாடி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தாளவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சரக்கு ஆட்டோவில் வெங்காயம் விற்பனை செய்து கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்த போது அவர்கள் இருவரும் மெட்டல்வாடியில் பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து பிளாஸ்டிக் டிரம்களில் நிரப்பி கர்நாடக மாநிலத்திற்கு கடத்திச் செல்ல முயன்றதும், இருவரும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரை சேர்ந்த பசில் பாட்ஷா (43), ஆசிபுல்லா(39) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் பிடித்த போலீசார் சரக்கு வாகனத்துடன் ஈரோடு உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.