கூடுதல் வட்டி தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ.71 லட்சம் மோசடி செய்தவர் கைது..!

கோவை, கூடுதல் வட்டி தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ.71 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

கோவை மாநகர குற்றப் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறும் போது:-

கோவை வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் பெலிக்ஸ் பெர்னார்டு (வயது 35), தினேஷ் (30). இவர்கள் டிரேட் குயின்ட் வெல்த் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனத்தை சாய்பாபாகாலனி என்.எஸ்.ஆர். ரோட்டில் நடத்தி வந்தனர். ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் தருவதாகவும், பின்னர் செலுத்திய தொகையை தருவதாகவும் பலரிடமும் தெரிவித்தனர். இதனை நம்பி கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்த பிரதீப்ராஜா ரூ.8 லட்சம் முதலீடு செய்தார். இதற்காக சில மாதங்களுக்கு மட்டும் லாப தொகையில் பங்கு என்று கூறி ரூ.40 ஆயிரம் மட்டும் கொடுத்துவிட்டு ஏமாற்றி விட்டனர். இதுகுறித்து பிரதீப்ராஜா கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், பெலிக்ஸ் பெர்னார்டு, தினேஷ் ஆகியோர் ரூ.71 லட்சம் வரை பலரிடம் மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மோசடி உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி பெலிக்ஸ் பெர்னார்டை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில் வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டு இருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள 15 பவுன் நகை மீட்கப்பட்டது. மேலும் இந்த மோசடி தொடர்பாக 60 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இந்த மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள தினேஷ் என்பவரை போலீசார் வலைவீசி வருகின்றனர்.