அதிமுகவின் இணை, துணை ஒருங்கிணைப்பாளர் பதவி நியமனம் – அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்ட ஓபிஎஸ்..!

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, எடப்பாடி கே பழனிசாமி ஒரு பக்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ பன்னீர்செல்வம் அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

நேற்று முன்தினம் ஓபிஎஸ் விடுத்த அறிவிப்பில், அதிமுகவிலிருந்து பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும், அவர்களது வேண்டுகோளுக்கிணங்க, மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்பட அனுமதிக்கப்படுகிறார்கள்.

ரத்து செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர், தொகுதிக் கழகச் செயலாளர் மற்றும் தொகுதிக் கழக இணைச் செயலாளர்கள் பதவிகள் மீண்டும் தோற்றுவிக்கப்பட்டு, ஏற்கெனவே பணிபுரிந்தவர்கள் மீண்டும் அந்தந்தப் பொறுப்புகளில் பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள். காலியாக உள்ள பொறுப்புகள் விரைந்து நிரப்பப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து நேற்று, 14 பேரை அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்களாக நியமித்து ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கத்தை நியமித்து சற்றுமுன் ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரை துணை ஒருங்கிணைப்பாளர்களாக 3 பேரை நியமித்து ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.