கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்.!!

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

இதில் திருநங்கைகள், சுற்று வட்டார கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இக்கோயிலில் கடந்த 9-ம் தேதி சித்திரைப்பெருவிழா தொடங்கியது. கடந்த 21-ம் தேதி கூத்தாண்டவருக்கு பாலாலயம், 22-ம் தேதி கம்பம் நிறுத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் மாலை திருநங்கைகள் தாலிகட்டி, கூத்தாண்டவரை கணவராக ஏற்கும் வைபவம் நடைபெற்றது.

நேற்று காலை கோயிலில் இருந்த அரவான் சிரசுக்கு முதல் மாலை அணிவிக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து, அரவான் சிரசு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அப்போது, திருநங்கைகள் சுற்றி நின்று கும்மியடித்தனர்.

பின்னர், 30 அடி உயர கம்பத்தில் அரவான் திருவுருவம் அமைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற தேரோட்டத்தில், உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ மணிக்கண்ணன் மற்றும் அறநிலையத் துறை அலுவலர்கள், கூவாகம், தொட்டி, கீரிமேடு, நத்தம் கிராமப் பிரமுகர்கள், திருநங்கைகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று, வடம் பிடித்து தேர் இழுத்தனர். அப்போது, விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த காய்கறிகளையும், தானியங்களையும் அரவான் மீது வீசியும், கற்பூரம் ஏற்றியும் வழிபாடு செய்தனர்.

பந்தலடியில் உள்ள அழிகளத்துக்கு தேர் சென்றவுடன், அரவான் களப்பலி நிகழ்வு நடைபெற்றது. அப்போது திருநங்கைகள் வளையல்களை உடைத்து கொண்டு, தாலியை அகற்றிக் கொண்டனர்.

மேலும், சில திருநங்கைகள் அறநிலையத் துறை அலுவலர்களிடம், தங்கத் தாலியை கோயிலுக்கு காணிக்கையாக ஒப்படைத்தனர். பின்னர் நீராடி, வெள்ளாடை அணிந்து விதவைக் கோலம் பூண்டு, தங்களது சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

இந்நிகழ்வில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களைச் சேர்ந்த திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், விழுப்புரம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டையிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. 1,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பணியில் ஈடுபட்டனர்.