கார்கில் யுத்த வெற்றி நாள்- ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வீர வணக்கம்..!!

டெல்லி: பாகிஸ்தானுடனான கார்கில் யுத்தத்தில் நமது நாட்டின் ராணுவ வீரர்கள் இன்னுயிர் ஈந்து மகத்தான வெற்றியை பெற்ற தினம் இன்று..

ஆண்டுதோறும் ஜூன் 26-ந் தேதி கார்கில் யுத்த வெற்றி நாள் – கார்கில் விஜய் திவாஸ் என கடைபிடிக்கப்படுகிறது. கார்கில் யுத்தத்தில் எல்லைகளைக் காக்க வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கு இன்று நமது தேசம் வீரவணக்கம் செலுத்துகிறது.

நாடு விடுதலை அடைந்த காலம் முதல் இந்தியா- பாகிஸ்தான் இடையே யுத்தங்கள் ஒரு தொடர் நிகழ்வாகும். 1999-ம் ஆண்டு இன்னொரு இந்தியா பாகிஸ்தான் யுத்தத்துக்கு காரணமாக இருந்தது கார்கில் ஆக்கிரமிப்பு.

1999-ம் ஆண்டு மே மாதத்தில் பாகிஸ்தான் ராணுவம், பயங்கரவாதிகள் துணையுடன் இந்தியாவுக்குள் ஆக்கிரமிக்க நுழைந்தது. இதனையடுத்து இந்திய ராணுவ வீரர்கள் கார்கில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அவர்களக் கைது செய்து சித்ரவதைக்கு பின் படுகொலை செய்தது பாகிஸ்தான் ராணுவம்.

இதனைத் தொடர்ந்து கார்கில் யுத்த முனையில் இருநாடுகளின் ராணுவம் இடையே மோதல் வெடித்தது. 1999-ம் ஆண்டு ஜூன் 6-ல் இந்திய ராணுவம், கார்கில் பகுதியில் மிகப் பெரும் யுத்த நடவடிக்கையில் இறங்கியது. அப்போது பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருந்தவர் பர்வேஷ் முஷாரப். ஒரு கட்டத்தில் இந்திய ராணுவத்தின் முப்படைகளும் யுத்த களத்தில் முழு வீச்சாக களமிறங்கின. பின்னர் பாகிஸ்தான் ஊடுருவி கைப்பற்றி இருந்த ஒவ்வொரு பகுதியாக இந்திய ராணுவ வீரர்கள் உயிரை தியாகம் செய்து மீட்டெடுத்தனர்.

1999-ம் ஆண்டு ஜூலை 14-ல் கார்கில் யுத்தத்தில் பாரதம் வெற்றி பெற்றதாக அப்போதைய பிரதமர் வாஜ்பாய் பிரகடனம் செய்தார். ர்கில் யுத்தத்தில் நமது ராணுவ வீரர்கள் 500க்கும் மேற்பட்டோர் வீர மரணம் அடைந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
கார்கில் யுத்தம் 1999-ம் ஆண்டு ஜூலை 26-ல் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது. ஆகையால் அன்றைய தினம் கார்கில் யுத்த வெற்றி நாள் அல்லது கார்கில் விஜய் திவாஸ் என கொண்டாடப்படுகிறது.

கார்கில் யுத்த வெற்றி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு தமது ட்விட்டர் பக்கத்தில் அஞ்சலி செலுத்தி உள்ளார். கார்கில் யுத்த வெற்றி நாளை முன்னிட்டு லடாக்கின் திராஸ், ஜம்மு உள்ளிட்ட பகுதிகளில் போர் நினைவுச் சின்னங்களில் ராணுவ தளபதிகள் ராணுவ மரியாதையுடன் வீரவணக்கம் செலுத்தினர்.

மேலும் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் நாட்டின் முப்படை தளபதிகளும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அங்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் மலர் வளையம் வைத்து உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.