பூட்டிய வீட்டில் தூக்கு போட்டு இறந்த மகன் பிணத்துடன் மூன்று நாட்கள் இருந்த தாய்: கோவையில் பரபரப்பு

பூட்டிய வீட்டில் தூக்கு போட்டு இறந்த மகன் பிணத்துடன் மூன்று நாட்கள் இருந்த தாய்: கோவையில் பரபரப்பு

கோவை ஆவாரம்பாளையம் ஸ்ரீவல்லி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் என்பவரின் மகன் சிபி சுப்பிரமணியம் (43). கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாக வில்லை. இவரது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன் பின்பு சுபி சுப்பிரமணியம் தனது தாயார் வசந்தாவுடன் வசித்து வந்தார்.வசந்தா பல்கலைகழகத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியை ஆவார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வசந்தாவுக்கு தலையில் அடிபட்டு மனநிலை லேசாக பாதிக்கப்பட்டது.மன நலம் பாதிக்கப்பட்ட தாயை சிபி சுப்பிரமணியம் சாப்பாடு கொடுத்து, பணிவிடைகள் செய்து கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சிபி சுப்பிரமணியத்தின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதை அடுத்து வீட்டின் உரிமையாளர் முனியசாமி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தார் .பிறகு கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் மற்றும் பீளமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்தபோது சிபி சுப்பிரமணியம் தூக்கில் பிணமாக தூங்கிக் கொண்டிருந்தார். இதை தொடர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சிபி சுப்பிரமணியம் அழுகிய நிலையில் பிணமாக இருந்தார் .மேலும் மனநிலை பாதிக்கப்பட்ட அவரது தாயார் வசந்தா என்ன நடந்தது என்பது தெரியாமலே வீட்டில் உள்ள மற்றொரு அறையில் அமர்ந்து இருந்தார்.இதை பார்த்து போலீசாரும் அப்பகுதி பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் போலீசார் சிபி சுப்பிரமணியத்தின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்த அவரது தாயாரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேலும் இறந்த சிபி சுப்பிரமணியத்தின் சகோதரி ஓசூரில் இருந்து நேற்று மாலை கோவைக்கு வந்தார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த வியாழக்கிழமை மாலை சிபி சுப்பிரமணியம் பால் வாங்கிவிட்டு வீட்டிற்குள் சென்றதும் அதன் பிறகு வெளியில் வராததும் தெரியவந்தது. மேலும் சிபி சுப்பிரமணியம் வியாழக்கிழமை இரவே தூக்கு போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த அவரது தாயார் மகன் இறந்தது கூட தெரியாமல் இருந்ததும், மூன்று நாட்களாக உணவு சாப்பிடாமல் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் கூறும்போது, கடந்த இரண்டு நாட்களாக சிபி, சிபி என அவரது தாயார் வீட்டிற்குள் புலம்பியபடியே இருந்து வந்தார் என தெரிவித்தனர். பெற்ற மகன் இறந்தது கூட தெரியாத நிலையில் இருந்த தாய் ,பசியுடன் மூன்று நாட்கள் மகன் பிணத்துடன் பூட்டிய வீட்டிற்குள் இருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சிபி சுப்பிரமணியம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு என்ன காரணம் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.