பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்.. பின்புலத்தில் டெல்லி சதி.. முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு..!

மால்டா: மேற்கு வங்க மாநிலத்தில மால்டா பகுதியில் அரசு பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர் மாணவர்களை மிரட்டிய சம்பவத்தில் மத்திய அரசின் சதி உள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

மேறகு வங்க மாநிலம் மால்டா பகுதியில் உள்ள அரசு பள்ளிக்குள் நுழைந்த நபர் ஒருவர் துப்பாக்கி மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி அங்குள்ள மாணவர்களை மிரட்டினார். மேலும் அந்த நபர் மெர்குரி, ஆசிட் நிறைந்த பாட்டில்களையும் தனது கையில் வைத்திருந்தார்.

இதனால் மாணவர்கள் அச்சத்தில் உறைந்திருந்தனர். இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த உள்ளூர் இளைஞர்கள் சிலர் அந்த நபரிடம் பேச்சு கொடுத்தபடியே அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்து ஆயுதங்கள், ஆசிட் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அதற்கு போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்களிடம் அந்த நபரை இளைஞர்கள் ஒப்படைத்தனர். அத்துடன் அவர் வைத்திருந்த ஆயுதங்களையும் ஒப்படைத்தனர். அந்த நபரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் பெயர் ராஜு பல்லவ் என்பது தெரியவந்தது. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருகக்லம் என கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால் அந்த பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில் துப்பாக்கி ஏந்தி மாணவர்களை மர்ம நபர் மிரட்டிய விவகாரத்தில் எந்த அசம்பாவிதங்களும் நடைபெறும் முன்னரே போலீஸார் அந்த நபரை பிடித்ததற்கு முதலில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

மேற்கு வங்கத்தை சுற்றி சதி வலை பின்னப்படுகிறது. இதில் மத்திய அரசின் பங்கு இருக்கிறது என நம்புகிறேன். இது போன்று மேற்கு வங்கத்தில் சதி திட்டங்களை யார் செய்கிறார்கள் என்பது சரியாக எனக்கு தெரியாது, ஆனால் இது மத்திய அரசை சேர்ந்த யாரோ ஒருவர் செய்த வேலைதான். எங்கெல்லாம் பாஜக ஆட்சி அல்லாத மாநிலங்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் அமைதியை குலைக்கும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

இதை எனக்கும் என் மாநிலத்திற்கும் அவர்கள் ஆரம்பத்திலிருந்தே செய்து வருகிறார்கள். சாதாரண நபரால் துப்பாக்கியை எடுத்து கொண்டு பள்ளியில் குழந்தைகளை மிரட்ட முடியாது, குழந்தைகளை பிணையாக பிடித்து வைத்திருக்க முடியாது. அந்த நபர் பிணை என்ற வார்த்தையை எங்கிருந்து கற்று கொண்டிருப்பார். இது போல் யாராவது துப்பாக்கியை வைத்துக் கொண்டு மிரட்டினால் அவர்கள் மனநிலை சரியில்லாதவர்கள் என கூறிவிடுகிறார்கள் என குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து மேற்கு வங்க பாஜக தலைவர் சுகந்தா மஜும்தர் கூறுகையில் கொல்கத்தாவை லண்டன் போல் வளர்ச்சியடைய செய்வேன் என முதல்வர் மம்தா கூறியிருந்தார். ஆனால் நான் கேள்விப்பட்டதெல்லாம் அமெரிக்காவில்தான் துப்பாக்கிச் சூடு, துப்பாக்கியை வைத்து மிரட்டல் உள்ளிட்டவை தொடர்பான சம்பவங்கள் நடந்துள்ளன. தற்போது நம் மாநிலத்தில் உள்ள நகரங்களிலும் கிராமங்களிலும் துப்பாக்கி கலாசாரம் நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு எத்தனை மோசமாக மாறியுள்ளது என்பதை கற்பனை செய்து பாருங்கள் என்றார்.