அதிமுக அலுவலக சாவி யாருக்கு..? உச்சகட்ட பரபரப்பில் இன்று தீர்ப்பு..!!

திமுகவின் அலுவலக பணத்தில் ஓ பன்னீர்செல்வம் முறைகேடு செய்துள்ளதாக, எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில், ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் முதல் ஏற்பட்டது.

இதில் அதிமுகவின் தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டதால், சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்தார்.

பின்னர் நீதிமன்ற உத்தரவுபடி, அதிமுக தலைமை அலுவலகத்தின் சீல் அகற்றப்பட்டு, அலுவலகத்தின் சாவி எடப்பாடி பழனிசாமி இடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகத்திற்கு வந்து, நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதற்கிடையே, அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி இடம் ஒப்படைக்க உத்தரவிட்ட, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக, ஓ பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

கடந்த மாதம் 18 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஓபிஎஸ் தரப்பில், “அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்தது தவறு” என்று வாதிடப்பட்டது. மேலும், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், சாவி விவகாரத்தில் எந்த தடையையும் விதிக்க மறுத்து, எடப்பாடி பழனிசாமி மற்றும் வருவாய்த் துறையினர் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த உத்தரவின் மூலம் கிட்டத்தட்ட வழக்கின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி பக்கம்தான் சாதகம் என்று உறுதியான நிலையில், இன்று எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “அதிமுகவின் அலுவலகத்தில் பணம் கையாடல் நடந்து உள்ளது. மேலும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத ஓ பன்னீர்செல்வத்திடம், எப்படி அலுவலகத்தின் சாவியை ஒப்படைக்க முடியும். இந்த வழக்கில் எந்த முகாந்திரமும் கிடையாது” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், தென்சென்னை வருவாய் கோட்டாட்சியரும் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ”சென்னை ராயப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட வன்முறையை கட்டுப்படுத்தும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று, வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

3 வார இடைவெளிக்குபிறகு அதிமுக தலைமை அலுவலக சாவி தொடர்பான வழக்கு நாளை (திங்கள்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

மேலும், அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை வரும் 16 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.