எலிசபெத் விருப்பப்படி.. இறுதிப் பயணத்தில் ஒன்றாக செல்லும் தம்பதி… ஒன்றரை வருடங்களாக ராணிக்காக காத்திருந்த மன்னரின் உடல்- அரசு மரியாதையுடன் 19ம் தேதி நல்லடக்கம்..

ண்டன்: இங்கிலாந்து ராணி எலிசபெத் உடலும், அவரது மறைந்த கணவர் பிலிப்பின் உடலும் அரசு மரியாதையுடன் அருகருகே நல்லடக்கம் செய்யப்படவிருக்கின்றன.

மன்னர் பிலிப்பின் உடல் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ராணி எலிசபெத்துக்காக காத்திருந்தது. இங்கிலாந்து ராணி எலிசபெத் (96) உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானார். அவரது கணவர் பிலிப், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் காலமானார். தற்போது இந்த தம்பதியின் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ராணி எலிசபெத் மரணத்துக்குப் பிறகு, ராணி – மன்னரின் உடல்கள் அருகருகே நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதுதான் ராணியின் விருப்பமாக இருந்துள்ளது. அதனால் இளவரசர் பிலிப்பின் உடல், பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்கு பின்னர், தி ராயல் வால்ட்டில் உள்ள சாப்பலில் வைக்கப்பட்டது. இதன் மூலம் ராணி – மன்னரின் இறுதிப் பயணமும் ஒரே இடத்தில் நிறைவு பெறுவதற்கான தருணம் வந்துவிட்டது. விண்ட்ஸர் கோட்டையின் கிங் ஜார்ஜ் ஆறாவது மெமோரியல் சேப்பலில் ராணி எலிசபெத் – இளவரசர் பிலிப் உடல்கள் அருகருகே நல்லடக்கம் செய்யப்படவிருக்கின்றன.

இதற்காக, ராணி எலிசபெத்தின் மறைந்த கணவர் பிலிப்பின் உடலும் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் இருக்கும் ராயல் வால்ட்டில் இருந்து, மெமோரியலுக்கு மாற்றப்பட உள்ளது. இங்குதான் ராணி இரண்டாம் எலிசபெத்தின் பெற்றோரான ஆறாம் ஜார்ஜ், ராணி எலிசபெத்தின் உடல்களும், இரண்டாம் ராணி எலிசபெத்தின் சகோதரி மார்கரெட்டும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர். ராணி எலிசபெத்தின் உடல் அரசுமரியாதையுடன் இறுதிச் சடங்குகள் வரும் 19ம் தேதி வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசுமரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நிறைவடைந்த பிறகு, ராணியின் உடல் விண்ட்ஸர் காஸ்டில் உள்ள செயின்ட் ஜார்ஜ்ஜின் சாப்பலுக்குக் கொண்டு செல்லப்படும். அங்கு எடின்பரோ கோமகன் பிலிப்பின் உடலுடன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் அருகருகே நல்லடக்கம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.