கேம் செயலி மூலம் நூதன மோசடி… சோதனையில் சிக்கிய கட்டுக்கட்டாக மலை போல் குவிந்திருந்த கோடி கணக்கில் பணம்..!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் வசித்து வருபவர் ஆமீர் கான். இந்த ஆமீர் கான் இ-நக்கட்ஸ் என பெயரில் கேம் செயலியை உருவாக்கி அதன் மூலம் விளையாடி மக்கள் பணம் ஈட்டலாம் என்று ஆசை வலை விரித்து கோடிக் கணக்கில் பண மோசடி செய்துள்ளார்.

இவரது வங்கிக் கணக்கில் முறையற்ற வகையில் பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுவதை அறிந்த பெடரல் வங்கி அதிகாரிகள் அமலாக்தத்துறைக்கு புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமீர் கானுக்குச் சொந்தமான 6 இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அமலாக்கத்துறையினருக்கு பாதுகாப்பாக மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் வங்கி அதிகாரிகள் சோதனையின் போது உடன் இருந்தனர்.

இந்த அதிரடி சோதனையில் அவரது வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை எண்ணுவதற்கு வங்கி அதிகாரிகள் கையோடு பணம் எண்ணும் இயந்திரத்தை கொண்டு வந்துள்ளனர். அங்கு கட்டுக்கட்டாக மலை போல குவித்து வைத்திருந்த பணத்தை பல மணி நேரம் எண்ணி முடித்த நிலையில், மொத்தம் ரூ.18 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக ஆய்வு தெரிவிக்கிறது. அத்துடன் இந்த ஆய்வில் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சோதனை தொடர்பாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் பிர்ஹாத் ஹகிம் கூறுகையில், ‘அமலாக்கத்துறை இவ்வாறு தொழிலதிபர்களை அச்சுறுத்துவது, பலருக்கு தொழில் செய்யும் எண்ணத்தை சீர்குலைக்கும் விதமாக அமைந்துவிடும்’ என்றார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமைச்சரின் இந்த பதிலுக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.